தமிழகம்

மாணவி தற்கொலை செய்த வழக்கில் 4 பேராசிரியர்களுக்கு ஜாமீன் ரத்து

செய்திப்பிரிவு

தனியார் கல்லூரி மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேராசிரியர்களின் ஜாமீனை ரத்து செய்ததோடு அவர்களை கைது செய்யுமாறு புதுவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுவை மதகடிப்பட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவி வினோதினி (19). இவர், கல்லூரியின் 3வது மாடியில் இருந்து குதித்து பிப்ரவரி 24ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். மாணவி வினோதினி தற்கொலைக்கு அதே கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள்தான் காரணம் என்றும் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரி பேராசிரியர்கள் எர்னஸ்ட் பால், பவானி, கீதா, பிரியதர்ஷினி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 4 பேராசிரியர்களும் நெஞ்சு வலி காரணமாக புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் மாணவிக்கு ஆதரவாக கல்லூரி மாணவ, மாணவியர், பல்வேறு அமைப்பினர் புதுச்சேரியில் போராட்டம் நடத்தினர். அதேபோல் கைதான பேராசிரியர்களுக்கு ஆதரவாக கல்லூரி பேராசிரியர்களும் ஊர்வலம் நடத்தினர். கைதான 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்ட பிறகே, மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்று இறுதி சடங்குள் செய்தனர்.

இந்த நிலையில், கைதான 4 பேராசிரியர்களுக்கும் மார்ச் 3ம் தேதி ஜாமீன் தரப்பட்டது. மேலும், வழக்கை திரும்ப பெறக்கோரி மாணவி வினோதியின் தந்தை இளங்கோவுக்கு மிரட்டல் விடப்பட்டது. இதையடுத்து, 4 பேரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி அவர் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த புதுச்சேரி முதன்மை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், குற்றம் சாட்டப்பட்ட 4 பேராசிரியர்களின் ஜாமீனை ரத்து செய்தார். மேலும், 4 பேரையும் கைது செய்யுமாறு திருபுவனை போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT