சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஐஓசி எண்ணெய் கிடங்கிலிருந்து பெட்ரோல் நிரப்பு வதற்காக, காலி சரக்கு ரயில் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் சென்று கொண்டிருந்தது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே செல்லும்போது, எதிர்பாராதவிதாக ரயிலின் இரண்டு பெட்டிகள் திடீரென ரயில் பாதையில் இருந்து விலகி பலத்த சத்தத்துடன் கீழே இறங்கி தடம் புரண்டன.
இதையடுத்து, ரயிலை உடனடியாக நிறுத்தி, சம்பவம் குறித்து ரயில் ஓட்டுநர், கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து ரயில்வே அதிகாரிகளும், 50க்கும் மேற்பட்ட ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணயில் ஈடுபட்டனர்.
இதேபோல, சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பேசின்பாலம் இடையே உள்ள பணிமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் டீசல் ரயில் இன்ஜின் ஒன்று தடம் புரண்டது. இதில், ரயிலின் 3 சக்கரங்கள், தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. பணிமனையில் இருந்து இன்ஜினை வெளியே கொண்டு வந்த போது ரயில் இன்ஜின் தண்டவாளத்தை விட்டு இறங்கியது.
இதனால், பணிமனையில் இருந்து அடுத்தடுத்து ரயில்கள் வெளியே வருவதில் சிரமம் ஏற்பட்டது. பணிமனையில் தடம் புரண்ட இன்ஜின் மூன்று மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டது. சென்ட்ரல் அருகே அடுத்தடுத்து, நடந்த இரண்டு சம்பவங்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.