தீபாவளியை கொண்டாடாத எஸ்.மாம்பட்டி கிராமம்.
சிவகங்கை: தீபாவளி என்றதுமே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாகி விடுவர். புத்தாடை, பட்டாசு, பலகாரம் வாங்க கடைவீதிகளில் கூட்டம் அலைமோதும். ஆனால், தீபாவளியைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், அந்நாளை மற்றுமொரு சாதாரண நாளாக கடந்து செல்கின்றனர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 12 கிராமங்களின் மக்கள்.
சிங்கம்புணரி ஒன்றியம் எஸ்.மாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எஸ்.மாம்பட்டி, ஒப்பிலான்பட்டி, சந்திரபட்டி, தும்பைப்பட்டி, இடையபட்டி, கிலுகிலுப்பைப்பட்டி, திருப்பதிபட்டி, வலையபட்டி, கச்சப்பட்டி, கழுங்குப்பட்டி, தோப்புபட்டி மற்றும் இந்திரா நகரைச் சேர்ந்த மக்கள் கடந்த 72 ஆண்டுகளாக தீபாவளியைக் கொண்டாடுவதில்லை.
இந்த கிராமங்களில் தீபாவளி நாளில் பட்டாசு சத்தம் கேட்காது; புத்தாடை அணிந்தவர்களை காண முடியாது; வழக்கம்போல மக்கள் விவசாயப் பணிக்காக விளைநிலங்களுக்குச் சென்றுவிடுவர். தீபாவளிக்கான அறிகுறியே அந்தப் பகுதியில் தென்படாது.
இப்பகுதி மக்கள் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் விவசாயப் பணிகளை தொடங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். முந்தைய காலத்தில் பெரும்பாலானோர் வசதியில்லாத நிலையில் இருந்துள்ளனர். இதனால் வட்டிக்கு பணம் வாங்கித்தான் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். தை மாதம் அறுவடை பணி முடிந்ததும் வட்டிக்கு வாங்கிய கடனுக்காக நெல் தானியங்களை கொடுத்து வந்துள்ளனர். இதனால், ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி பலருக்கும் பெரும் சுமையாக இருந்துள்ளது.
பலரும் தீபாவளிக்காக கூடுதலாக கடன் வாங்கும் நிலை இருந்துள்ளது. இதற்கு முடிவு கட்ட நினைத்த அப்பகுதி மக்கள், கடந்த 1954-ம் ஆண்டு ஊர்க்கூட்டம் கூட்டி, இனி தீபாவளி கொண்டாடுவதில்லை என முடிவெடுத்தனர். 72 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவை இன்றும் விடாமல் கடைபிடித்து வருகின்றனர்.
இதுகுறித்து எஸ்.மாம்பட்டியைச் சேர்ந்த உலகநாதன் கூறியதாவது: விவசாயப் பணி காலத்தில் தீபாவளி வருவதால் யாரிடமும் பணம் இருக்காது. பலரும் வட்டிக்கு கடன் வாங்கித்தான் விவசாயப் பணியை செய்திருப்பர்.
இதுபோன்ற சூழலில் தீபாவளி வருவதால் அதைக் கொண்டாட பணம் இன்றி தவிப்பர். இதனால் கடன் வாங்கித்தான் தீபாவளி கொண்டாடும் நிலைமை இருந்தது. அந்தக் காலத்தில் ரூ.100 கடனுக்கு ஒரு மூட்டை நெல் கொடுக்க வேண்டும். அது விவசாயிகளுக்கு பெரும் சுமையாக இருந்தது. அதனால் பலரும் தீபாவளி கொண்டாட சிரமப்பட்டனர்.
அதன்பிறகு கொஞ்சம் வசதி வாய்ப்புகள் கிடைத்தபோதும் எங்கள் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. வசதி படைத்தவர்கள் மட்டும் கொண்டாடினால், ஏழைகள் மனம் தவிக்கும் என்பதால் தீபாவளி கொண்டாடுவதை விட்டுவிட்டோம்.
ஆனால், பொங்கல் பண்டிகையை தீபாவளியைப் போன்று சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் வெளியூர்களில் வசித்தாலும் தீபாவளி கொண்டாடுவதில்லை. அதேபோல் எங்கள் ஊர் பெண்களை திருமணம் செய்திருந்தாலும் தலை தீபாவளி விருந்துக்கு அழைக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினர்.