ஓசூர்- சூளகிரி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக்கோரி, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க 12 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
தொழில் நகரான ஓசூரில் குண்டூசி ஊசி முதல் விமானத்தின் உதிரிப் பாகங்கள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் பொருட்கள் வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. ஓசூர் நகரின் தரை வழிப் போக்குவரத்து உள்ள நிலையில் வான் வழிப் போக்குவரத்துக்கு பெங்களூருவை நம்பியுள்ள நிலையில், தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு அறிவித்தார்.
தொடர்ந்து, தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) ஓசூரைச் சுற்றியுள்ள 5 இடங்களை தேர்வு செய்து இந்திய விமான நிலையம் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்ற 2 இடங்கள் சாத்தியம் என இந்திய விமான நிலையம் ஆணையம் பதிலளித்தது.
இதையடுத்து, தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் சிறப்பு ஆலோசகரை நியமித்து 2 இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வின்படி சூளகிரி வட்டத்துக்கு உட்பட்ட வெங்கடேஷ்புரம், மிடுதேப்பள்ளி, ஓசூர் வட்டத்துக்கு உட்பட்ட அரவனப்பள்ளி, முத்தாலி, அளேந்தம், பலவனப் பள்ளி, ஆத்தூர், காருப்பள்ளி, தாசனப்பள்ளி, நந்திமங்கலம், சூடகொண்டப்பள்ளி உள்ளிட்ட 12 கிராமங்களில் 2,980 ஏக்கர் நிலத்தில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறது.
மேலும், இத்திட்டத்துக்காக 12 கிராமங்களில் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள ஈர நிலம் (விவசாய நிலம்), வறண்ட நிலம், அரசு புறம்போக்கு நிலம் ஆகியவற்றின் சர்வே எண்ணுடன் அரசின் நிர்வாக அனுமதியை பெற்றுத்தரக் கோரி கடந்த செப்டம்பரில் மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது. இத்தகவல் அறிந்த 12 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஓசூர் அருகே நந்திமங்கலத்தில் நேற்று 12 கிராம விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் கூட்டமைப்பு உருவாக்க வேண்டும். முதல்கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திட்டத்தை கைவிட வலியுறுத்துவது, கோரிக்கை ஏற்கவில்லை எனில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது, போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள், இயற்கை ஆர்வலர்களின் ஆதரவு கோருவது என முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, பாஜக நிர்வாகியும், முன்னாள் எம்பியுமான நரசிம்மன், பாமகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, “ஓசூர் பகுதிகளில் தொழிற்சாலைகள், சாலைகள் அமைக்க 25,000 ஏக்கர் விளை நிலங்கள் எடுக்கப்பட்டுள்ளது. 5-வது சிப்காட் அமைக்க விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டால், 12 கிராமங்கள் பாதிக்கப்படும். விமானம் நிலையத்தால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. எனவே, அரசு இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்து வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும்” என்றனர்.
இதுதொடர்பாக சிறு, குறு தொழில்முனைவோர் கூறும் போது, “ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைந்தால் 5 ஆண்டுகளில் பெங்களூருவை போல, ஓசூர் நகரம் அபார வளர்ச்சி அடையும்” என்றனர்
இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும் போது, “ஓசூர் மற்றும் சூளகிரி இடையே 800 ஏக்கரில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. கிராமங்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படாமல் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.