சென்னை: திருவொற்றியூரில் கொல்லப்பட்ட மாணவர் தனுஷின் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
கோவையில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விவாதிக்க, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
அதன் மீது உதயநிதி பேசியதாவது: கோவையில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்த பொறியியல் மாணவர் அமுதனை 20 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
கொலையில் தொடர்பு உடையவர்கள் மீதும், குற்றவாளிகளுக்கு தகவல் கொடுத்த போலீஸார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோன்று போதை கும்பலை தட்டிக்கேட்ட சென்னை திருவொற்றியூரை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவனை 30 பேர் கொண்ட கும்பல் கொலை செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, உறுப்பினர்கள் காமராஜ் (அதிமுக), கணேஷ்குமார் (பாமக), போஜராஜன் (பாஜக), செல்வசுவாமி (மார்க்சிஸ்ட்), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), தாரகை கத்பர்ட் (காங்கிரஸ்) ஆகியோரும் இதுகுறித்து பேசினர்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர்கள் கூறியதாவது:
சிடிஆர் நிர்மல் குமார்: கோவை மாணவர் அமுதன் கொலை வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறை விசாரணையில், இரு மாணவர் குழுக்கள் இடையே ஏற்பட்ட பழிவாங்கும் நோக்கத்தில் நடைபெற்ற தாக்குதலே அமுதன் மரணத்துக்கு வழிவகுத்துள்ளது.
இந்த வழக்குக்கும், போதைப் பொருளுக்கும் தொடர்பு இல்லை. மாணவர் குழுக்களுக்கு இடையிலான மோதலை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ராஜ்மோகன்: திருவொற்றியூரில் கொல்லப்பட்ட மாணவர் தனுஷின் குடும்பத்துக்கு முதல் கட்டமாக ரூ.6 லட்சம், அடுத்த கட்டமாக ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கவும், தாய், தந்தை இருவருக்கும் சேர்த்து மொத்தம் மாதம் ரூ.8 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவும், தனுஷின் அண்ணனுக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர்கள் தெரிவித்தனர்.