தமிழகம்

திருவாரூர் அரசுப் பள்ளியில் பாம்பு தீண்டிய 11-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

சி.எஸ். ஆறுமுகம்

திருவாரூர்: அரித்துவாரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாம்பு தீண்டி சிகிச்சை பெற்று வந்த 11ஆம் வகுப்பு மாணவன் இன்று (பிப்.8) உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம், சேத்தனூரைச் சேர்ந்தவரும் விவசாயியுமான முருகானந்தம்-ராதா. இந்த தம்பதியினரின் மகன் சிவப்பிரகாசம்(17). இவர், அரித்துவாரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

          

சிவப்பிரகாசம், கடந்த பிப்.4-ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றார். பின்னர் மதியம் இடைவேளையின் போது, உணவு சாப்பிடுவதற்காக தான் கொண்டு வந்த உணவுப்பையில் இருந்த டிபன் பாக்ஸை வெளியே எடுக்கும் போது, அதில் இருந்த கட்டுவிரியன் பாம்பு, சிவப்பிரகாசத்தை தீண்டியதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதையறிந்த அந்தப் பள்ளி ஆசிரியர்கள், அவரது பெற்றோருக்கு தகவல் அளித்தனர். பின்னர், சிவப்பிரகாசம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (பிப்.8) உயிரிழந்தார்.

அவரது உறவினர்கள், பள்ளி வளாகத்திற்குள் இருக்கும் அறையில் இருந்த புத்தகத்தை வெளியில் எடுக்கும் போது, அதில் இருந்த கட்டுவிரியன் பாம்பு தீண்டியதாக குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, இது தொடர்பாக அரித்துவாரமங்கலம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT