சென்னை: சட்டப்பேரவையில், முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அருகில், ஆர்.பி.உதயகுமார் அமர்ந்தார். அந்தஇடத்தில் ஏற்கெனவே அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக தேர்வானது. எதிர்க்கட்சி தலைவராக பழனிசாமியும், துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் செயல்பட்டு வந்தனர். அதன்பிறகு இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருஅணிகளாக பிரிந்தனர். இபிஎஸ் பொதுச் செயலாளர் ஆன நிலையில், ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
தொடர்ந்து, அதிமுக சார்பில்எதிர்க்கட்சி துணை தலைவராக இருந்த ஓபிஎஸ் மாற்றப்பட்டு, அவருக்கு பதில் ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் இருக்கைக்கு அருகில் உள்ள துணைதலைவர் இருக்கையை உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என்றுபேரவைத் தலைவர் அப்பாவுவிடம் அதிமுக தரப்பு நேரடியாகவும், கடிதம் வாயிலாகவும் பலமுறை வலியுறுத்தி வந்தது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் பேரவை தலைவராக இருந்த பி.தனபால் இதேபோன்ற சூழலில் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி பேரவைத் தலைவர் அப்பாவு, இருக்கை விவகாரம் என் முடிவுக்கு உட்பட்டது என்று தெரிவித்து வந்தார்.
இந்த சூழலில், கடந்த 13-ம்தேதி சட்டப்பேரவையில் பேரவைதலைவரிடம், இருக்கை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.
முதல்வர் கோரிக்கை: அப்போது பேசிய முதல்வர், ‘‘பேரவை தலைவர் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார். இதைத் தொடர்ந்து, நேற்று பேரவையில் இருக்கைகள் மாற்றம் செய்யப்பட்டன.
எதிர்க்கட்சி முதல் வரிசையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு அருகே ஓபிஎஸ் இருந்த இருக்கையில், துணை தலைவராக தேர்வான ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் இருக்கைக்கு பின்னால் 2-வது வரிசையில், முதல் இடத்தில் ஓபிஎஸ்ஸுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, ஓபிஎஸ் ஆதரவாளர் பால் மனோஜ் பாண்டியன் இருந்த இடத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கும், ஓபிஎஸ் இருக்கைக்கு பின்புறம் ஆர்.பி.உதயகுமார் அமர்ந்திருந்த 3-வது வரிசையில் மனோஜ் பாண்டியனுக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கடந்த 2 நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.