கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்த மக்கள், முதிர்வு காலம் முடிந்தும் பணத்தை திருப்பித் தரவில்லை எனக்கூறி நிறுவனத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி நகரில் பேல்ஸ் அக்ரோடெக் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிஏசிஎல்) என்கிற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் புதுடெல்லியில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு தமிழகத்தில் 13 கிளைகள் உள்ளன.
மக்களிடமிருந்து பணத்தைத் திரட்டி நிலத்தை வாங்குவது, இதன் மூலம் கிடைக்கும் லாபத்தை மீண்டும் மக்களுக்கு திரும்பத் தருவதாகக் கூறி பொது மக்களிடமிருந்து இந்நிறுவன முகவர்கள் பணத்தை வசூல் செய்து வருகின்றனர்.
இந்நிறுவனத்தில் சேரும் முதலீட்டாளர்கள் ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகே பணம் எடுக்க முடியும். ரூ.2500 முதல் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்படுகிறது. அவ்வாறு பெறப்பட்ட தொகையின் முதிர்வு காலம் ஐந்தரை ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை நிர்ணயம் செய்துள்ளனர். குறிப்பாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்பவர்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் முதிர்வுத் தொகையாக ரூ.9 லட்சத்து 26 ஆயிரத்து 680 வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை உட்பட மாவட்டத்தின் அனைத்து குக்கிராமங்களிலிருந்தும் விவசாயிகள், கூலித் தொழிலாளிகள், வியாபாரிகள், சிறு தொழில் செய்பவர்கள் என பலர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். முதலீட்டாளர்களி டமிருந்து முகவர்கள் பணத்தை வசூல் செய்து நிறுவனத்தில் செலுத்துகின்றனர். அவர்களுக்கு 12% கமிஷன் வழங்கப்படுகிறது. இவ்வாறு பணம் செலுத்தி முதிர்வு காலம் முடிந்த பின்னரும் பலருக்கு முதிர்வு தொகையை இந்நிறுவனம் வழங்கப்பட வில்லை என புகார் எழுந்துள்ளது.
முற்றுகை-வாக்குவாதம்
இதையடுத்து திங்கள்கிழமை முதலீட்டாளர்கள், முகவர்கள் முதிர்வுத் தொகையை வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி கிளை நிறுவனத்தை முற்றுகையிட்டனர். கிளை மேலாளரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து முதலீட்டாளர்கள் சிலர் கூறும்போது, தங்கள் பிள்ளை யின் கல்வி, திருமணம் உள்ளிட்ட பல தேவைகளை நிறைவேற்றிட இந்நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து வைத்தோம். தற்போது முதிர்வு காலம் முடிந்து சுமார் ஓராண்டு ஆகியும் பணத்தைத் தராமல் இழுத்தடித்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் ஒரு தவணை தேதி குறிப்பிட்டு மீண்டும் வருமாறு அனுப்பி விடுகின்ற னர். இந்த நிறுவனம் எங்களது பணத்தை மோசடி செய்துள் ளதாகத் தெரிகிறது என்றனர்.
சிபிஐ விசாரணை
இது குறித்து பிஏசிஎல் நிறுவன மேலாளர் ரவிசங்கர் கூறும்போது, எங்கள் நிறுவனம் நிதி நிறுவனம் அல்ல. ரியல் எஸ்டேட் நிறுவனம்தான். முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தை நிலத்தில் முதலீடு செய்துள்ளோம். மேலும், முதலீடு செய்த அனைவருக்கும் பணம் கிடைக்கும். தங்களது நிறுவனம் சிபிஐ விசாரணையில் உள்ளதால், பணம் முடக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கிளையில் மட்டும் கடந்த 2 வருடங்களில் 3276 பேருக்கு சுமார் ரூ.5 கோடியே 60 லட்சம் முதிர்வுத் தொகை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
தகவலறிந்த காவல்துறையினர் முதலீட்டாளர்களிடம், நிறுவன மேலாளர், ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளிக்குமாறு தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஏற்கெனவே ஒரு சில மாவட்டங்களில், பிஏசிஎல் நிறுவனத்தில் பொதுமக்கள் யாரும் முதலீடு செய்ய வேண்டாம் என மாவட்டக் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவல்துறையினர் மக்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் செய்யவில்லை என சமூக ஆர்வலர்கள் புகார் கூறினர். இதுகுறித்து மாவட்ட காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிறுவனத்தின் மீது ஒருவர்கூட புகார் தெரிவிக்கவில்லை. புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்தனர். முதலீட்டாளர்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்து கொண்டிருந்த அதே நேரத்தில் சிலர் பணத்தை முதலீடு செய்ய விண்ணப்பம் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஏற்கெனவே முதிர்வு காலம் முடிந்தும் பணம் தரவில்லை என புகார் கூறி வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தும் பணம் செலுத்தியது பலரை அதிர்ச்சியடையச் செய்தது.