புதுச்சேரியில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடக்கிறது. இதில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 10 எம்எல்ஏக்கள் உள்ளனர். 3 சுயேச்சைகள் ஆதரவும் உள்ளது. பாஜகவுக்கு 6 எம்எல்ஏக்கள், நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் என 9 எம்எல்ஏக்கள் பாஜகவில் உள்ளனர். இந்தச் சூழலில் இக்கூட்டணி வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கிறது.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் தற்போது மக்களவை உறுப்பினராக உள்ளார். அதேபோல் பாஜகவின் மாநிலத் தலைவர் செல்வகணபதி மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
இந்தச் சூழலில் புதுச்சேரியில் தற்போதைய மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட திட்டமிட்டுள்ளது. அதனோடு கூட்டணியில் உள்ள திமுகவும் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறது. இண்டியா கூட்டணியில், புதுச்சேரியில் காங்கிரஸ் பலம் இழந்துவிட்டதாக திமுக வெளிப்படையாகவே விமர்சிக்கிறது.
கடந்த தேர்தலில் காங்கிரஸில் இருந்து பலரும் வெளியேறிய சூழலில், தற்போது காங்கிரஸுக்கு வெறும் 2 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். திமுகவில் 6 எம்எல்ஏக்கள் உள்ளனர். திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தும் உள்ளது. கடந்த முறை காங்கிரஸில் தேர்தல் பணியில் ஈடுபட்டு நிதியை ஒருங்கிணைத்த பலர் தற்போது காங்கிரஸில் இல்லை. இதனால் ஒரு இக்கட்டான சூழல் இந்த முறை ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
தற்போதுள்ள சூழலில் இண்டியா கூட்டணியில், காங்கிரஸ் தரப்பில் தொடர்ந்து, தாங்களே போட்டியிடவுள்ளோம் என்று தெரிவித்தாலும், தேர்தல்பணிகளை அக்கட்சி இதுவரையிலும் தொடங்கவிலலை. புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளிலும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை அமைதி காக்கவே செய்கின்றனர். அதே நேரத்தில், பாஜக தேர்தல் பணிகளைத் தொடங்கி முடுக்கி விட்டிருக்கிறது.
பாஜகவை பொறுத்தவரையில், பிரபலமான ஒருவரை தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமியிடம் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார். யார் போட்டியிடுகிறார் என்பதில், இறுதி முடிவை கட்சி மேலிடம்தான் எடுக்கும் என்றாலும், சுவர் பிரசாரங்களிலும், கட்சி நிர்வாக கூட்டங்களிலும் பாஜகவினர் முன்கூட்டியே இறங்கிவிட்டதை களத்தில் காண முடிகிறது.
இருப்பினும் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கென்று பாரம்பரியமான நிலையான வாக்கு வங்கி உள்ளது. இதைக் கொண்டு இத்தேர்தலில் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் சீட் கேட்கிறது. அதேநேரம் திமுகவின் வளர்ச்சி, எதிர்க்கட்சி அந்தஸ்து ஆகியவற்றை முன்னிறுத்தி திமுகவும் களம் காண திட்டமிடுகிறது. இருபுறமும் யார் போட்டியிடுகிறார்கள் என்பது உறுதியாகும் பட்சத்தில், புதுச்சேரி தேர்தல் களம் சூடுபிடிக்கும்.