தமிழகம்

செந்தில் பாலாஜியின் ராஜினாமா ஏற்பு: முதல்வர் பரிந்துரையை ஏற்று ஆளுநர் மாளிகை அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்ததன் அடிப்படையில், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தற்போதைய திமுக அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராகஇருந்தவர் செந்தில் பாலாஜி. இவரை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த 2023 ஜூன்13-ம் தேதி அமலாக்கத் துறையினர்கைது செய்தனர். நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அரசு அறிவித்து அரசாணை பிறப்பித்தது. இந்த சூழலில், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக அறிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, பின்னர் உடனடியாக அந்த அறிவிப்பை நிறுத்தி வைத்தார்.

இதற்கிடையே, கைது செய்யப்பட்டதில் இருந்து கடந்த 8 மாதங்களாக செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தை நாடியும், ஜாமீன் வழங்கப்படவில்லை. தவிர, அவரது நீதிமன்ற காவலும்19-வது முறையாக நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையே, கடந்த ஜனவரி 30-ம் தேதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘‘கடைநிலை ஊழியர் ஒருவர் குற்ற வழக்கில் 48 மணி நேரம் சிறையில் இருந்தாலே உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறார். ஆனால், குற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த 243நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். அப்படி இருக்க, எந்த அடிப்படையில் அமைச்சராக பதவியில் நீடிக்கிறார்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையே, செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம், ‘‘ஒரு அமைச்சரவை பதவியில் இருந்து நீக்கஆளுநருக்கு அதிகாரம் இல்லை.செந்தில் பாலாஜி இலாகாஇல்லாத அமைச்சராக தொடர தடை இல்லை’’ என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதானவிசாரணை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இந்த சூழலில், புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த 12-ம் தேதிகடிதம் எழுதினார். ‘‘தங்கள் தலைமையின்கீழ் ஓர் அமைச்சராக, தமிழக மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை வழங்கிய தங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான்அப்பாவி, உண்மை நிலைபெறசட்டப்பூர்வமாக தொடர்ந்துபோராடுவேன். தனிப்பட்ட காரணங்களால் அமைச்சர்பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். இதை ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று அதில் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பிவைத்தது. அதை ஏற்றுக் கொண்டதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இதுகுறித்து ராஜ்பவன் வெளியிட்ட அறிவிப்பில், ‘முதல்வர் ஸ்டாலின்கடந்த பிப்ரவரி 12-ம் தேதி அனுப்பிய கடிதத்தில், தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு பரிந்துரைத்திருந்தார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT