தமிழகம்

சைதை துரைசாமியின் மகன் வெற்றி உடல் சென்னையில் தகனம்: ஆளுநர்கள், முதல்வர், தலைவர்கள் அஞ்சலி

செய்திப்பிரிவு

சென்னை: இமாச்சலப் பிரதேசத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் சென்னையில் நேற்று தகனம் செய்யப்பட்டது.

சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி (45). வனவிலங்குகளை படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர்.

விலங்குகளை புகைப்படம் எடுப்பதற்காக, தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சல பிரதேச மாநிலத்துக்குச் சென்றார். கடந்த 4-ம் தேதி மாலை கசாங் நளா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கார், சாலையை ஒட்டி இருந்த சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்தது. சுமார் 50 அடி பள்ளத்தில் உருண்டு சென்ற கார், நீரில் மூழ்கியது.

இதில், படுகாயம் அடைந்த நண்பர் கோபிநாத் மீட்கப்பட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உள்ளூர் கார் ஓட்டுநர் தன்ஜின் மற்றும் வெற்றி இருவரையும் காணவில்லை. பின்னர், ஆற்றில் இருந்து தன்ஜின் உடல் மீட்கப்பட்டது.

சைதை துரைசாமி மகன் வெற்றியை தேடும் பணி 9-வது நாளாக நீடித்தது. நேற்று முன்தினம் பிற்பகல் விபத்து நடந்த இடத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் சட்லெஜ் ஆற்றில், பாறையின் அடியில் சிக்கியிருந்த உடல் ஒன்றை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மீட்டனர்.

பின்னர், உடல் பிரேதப் பரிசோதனைக்காக, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வெற்றி எப்படியும் உயிருடன் வந்துவிடுவார் என்று சைதை துரைசாமி உட்பட குடும்பத்தினர் அனைவரும் நம்பிக் கொண்டிருந்த நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. வெற்றிக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

நடிகர் அஜித் அஞ்சலி: வெற்றியின் உடல் தனி விமான மூலம் நேற்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்பட்டு தாம்பரம் அருகே ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக சுமார் 40 நிமிடம் வைக்கப்பட்டது. அங்கு, நடிகர் அஜித், அவரது மனைவி ஷாலினி, அதிமுகவினர், காவல் துறை அதிகாரிகள், உறவினர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சி.ஐ.டி. நகரில் உள்ள சைதை துரைசாமியின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழ்நாடு வெற்றி கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், பாமக தலைவர் அன்புமணி, ரவீந்திரநாத் எம்.பி. வி.கே.சசிகலா, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், திரைப்படத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். வெற்றியின் உடல் தி.நகர் கண்ணம்மாபேட்டை மயான பூமியில் தகனம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT