தமிழகம்

வண்டலூர் பூங்காவில் 2 அனுமன் குரங்கு தப்பி ஓட்டம்

செய்திப்பிரிவு

வண்டலூர்: வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 170 வகையான 1,977 வனவிலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. இந்நிலையில் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், உத்தர பிரதேசமாநிலம், கான்பூர் உயிரியல் பூங்காவிலிருந்து, 10 அனுமன் குரங்குகள், 5 மர ஆந்தைகள், ஒரு ஜோடி இமாலயன் கிரிக்போன் கழுகு, ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் ஆகியவை, ஜன.28-ம் தேதி, வண்டலுார் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன.

இதற்கு மாற்றாக, வண்டலூரில் இருந்து ஒரு ஜோடி கட்ட உடல் மலைப்பாம்பு, 2 ஜோடி சருகுமான், 3 நெருப்புக் கோழி, ஒரு ஜோடி பச்சை உடும்பு, ஓர் ஆண் சாம்பல் ஓநாய் ஆகியவை கான்பூர் உயிரியல்பூங்காவுக்கு நேற்று அனுப்பப்பட்டன.

புதியதாக வருகை தந்த இந்த விலங்குகள் தனிமைப்படுத்தப்பட்டு, தனி கூண்டுகளில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தன. இதில் 5 அனுமன்குரங்குகள், பூங்கா மருத்துவமனை அருகே தனிக் கூண்டில் அடைக்கப்பட்டிருந்தன. அதேபோல் மேலும் 5 குரங்குகள் ரெஸ்கியூ மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பூங்கா மருத்துவமனை அருகே தனிக் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த 2 குரங்குகள் நேற்று காலை 8 மணியளவில் கூண்டிலிருந்து தப்பித்து காட்டுப் பகுதிக்குச் சென்றுவிட்டன. கூண்டிலிருந்து குரங்குகள் தப்பிச் சென்ற சம்பவம், பூங்கா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மாயமான குரங்குகளை பூங்கா ஊழியர்கள் வலைவீசித் தேடி வருகின்றனர்.

பூங்கா காட்டுப்பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பூங்காவைச் சுற்றி ஏராளமான காப்புக்காடுகள் உள்ளன. இங்கு மருத்துவர்கள் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி குரங்குகளைப் பிடிக்க தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT