காரைக்குடி: திருவாரூரில் இருந்து காரைக்குடி வழியாக மண்டபத்துக்கு 121 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது.
திருவாரூர், காரைக்குடி இடையே அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது திருவாரூரில் இருந்து காரைக்குடி வரை ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் 90 கி.மீ.-க்கு குறைவான வேகத்திலேயே இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த வழித் தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
அதன் படி நேற்று பிற்பகல் 1.50 மணிக்கு திருவாரூரில் இருந்து சோதனை ஓட்ட ரயில் புறப்பட்டது. இந்த ரயில் காரைக்குடி, சிவகங்கை, மானா மதுரை, ராமநாதபுரம் வழியாக 121 கி.மீ. வேகத்தில் மண்டபத்துக்கு இயக்கப்பட்டது. மேலும் திருவாரூர், காரைக்குடி இடையே மின் வழித்தடப் பணி முடிவடையாததால், டீசல் இன்ஜின் மூலம் சோதனை ஓட்ட ரயில் இயக்கப்பட்டது.