கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று சிறப்பு சிண்டிகேட் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கிடையே, பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரணை நடத்தினர்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியரின் தகுதி காண் பருவத்தை நிறைவு செய்து பணி நிரந்தரப்படுத்த ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் (பொறுப்பு) மதிவாணன் உள்ளிட்டோரை வழக்கில் சேர்த்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், துணைவேந்தர் கணபதியை பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார்.
லஞ்சம் பெற்றதாக துணைவேந்தர் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கை தனியாகவும், 80 பேராசிரியர், இணை, உதவி பேராசிரியர்கள் பணி நியமன முறைகேடு புகார் குறித்து தனியாகவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பணிநியமன முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்கும் லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீஸார், நேற்று பல்கலைக்கழகத்தில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது பதிவாளர் (பொறுப்பு) பி.வனிதா, ஆட்சிமன்றக்குழு பேராசிரியர்கள் அங்கு இருந்தனர். பல்கலைக்கழக பிரதான கட்டிடத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் சுமார் 40 நிமிடங்கள் இந்த விசாரணை நடைபெற்றது.
இதுகுறித்து பி.வனிதா கூறும்போது, ‘சிண்டிகேட் கூட்டம் நடத்தப்படுவது குறித்து கேட்டறிவதற்காக மட்டுமே லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வந்திருந்தார். எந்த ஆய்வும், விசாரணையும் நடத்தவில்லை. துணைவேந்தர் பணியிடை நீக்கம் குறித்த ஆளுநர் அலுவலக அறிவிப்பு தற்போதுதான் பல்கலைக்கழகத்துக்கு கிடைத்துள்ளது.
புள்ளியியல் துறை தலைவர் சுரேஷ் தலைமையில் இக்கூட்டம் கூடுகிறது. துணைவேந்தர் இல்லாத நிலையில், பல்கலைக்கழகத்தை வழிநடத்திச் செல்வது குறித்து, உயர்கல்வித் துறை செயலர் பங்கேற்கும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். இதில் பேராசிரியர்கள் 2 பேரைக் கொண்ட நிர்வாகக்குழு அமைக்கப்படும். புகாருக்கு உள்ளான மற்ற ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் இதில் விவாதிக்கப்படும்’ என்றார்.
துணைவேந்தர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று பல்கலைக்கழக சிறப்பு சிண்டிகேட் கூட்டம் நடைபெறுகிறது. அதில், உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. லஞ்ச புகாரில் சிக்கிய பேராசிரியர் தர்மராஜ், தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் மதிவாணன் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துணைவேந்தர் இல்லாத நிலையில் நிர்வாக ரீதியாக பல்கலைக்கழகத்தை வழிநடத்திச் செல்லவும், பணியிட நியமன முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது துறைரீதியான விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.