சேலம்: சேலம் அருகே மேட்டுப்பட்டியில் அடிப்படை வசதிகளை செய்து தராத ஊராட்சித் தலைவரைக் கண்டித்து வார்டு உறுப்பினர்கள் 4 பேர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மனு அளித்துள்ளனர். சேலம் மாவட்டம் அயோத்தியாப் பட்டணம் ஒன்றியத் துக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இதில் வார்டு உறுப்பினர்களான 2-வது வார்டு தியாகராஜன், 3-வது வார்டு வளர்மதி, 6-வது வார்டு கவிதா, 7-வது வார்டு அனுசியா ஆகியோர் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர் கூட்டத்தில் ஆட்சியர் பிருந்தாதேவியிடம் மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: மேட்டுப்பட்டி ஊராட்சி தலைவராக சந்திரா உள்ளார். இவர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் பாரபட்சமாக நடந்து கொள்கிறார். 9 வார்டுகள் உள்ள நிலையில், 2,3,6 மற்றும் 7 ஆகிய வார்டுகளை புறக்கணித்துவிட்டு மற்ற வார்டுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
எங்களது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர், சாலை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர். மக்கள் கோரிக்கை வைத்தும் அடிப்படை வசதிகளை செய்து தர முடியவில்லை. வார்டு உறுப்பினராக இருந்தும் எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது.
இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர ஊராட்சித் தலைவருக்கு உத்தரவிட வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விடுவோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.