தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இல்லை. இறுதியாகவும், உறுதியாகவும் சொல்கிறோம் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஒன்றிய திமுக முன்னாள் செயலாளர் கோவிந்தராசன், பர்கூர் ஒன்றியக் குழு தலைவர் கவிதா கோவிந்தராசன் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
இந்த விழாவில் பழனிசாமி பேசியதாவது:மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கிருஷ்ணகிரியை தனி மாவட்டமாக உருவாக்கினார். இங்கு அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தற்போதைய திமுக அரசு மின்கட்டணத்தை 52 சதவீதம் உயர்த்தி உள்ளது. வீடு, கடை சொத்துவரி, குடிநீர் வரிகள் உயர்த்தியுள்ளனர். குப்பைக்கு கூட வரி போடுகிறார்கள். திமுக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் மக்களைப் பற்றி
கவலைப்படவில்லை.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் செல்வதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஆனால், அங்கு தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோரை அழைத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறார். முதல்வர் அவரது சொந்த வேலைக்கு சென்றுள்ளதாகவும், இரண்டரை ஆண்டுகளில் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்வதற்காகச் சென்றுள்ளதாகவும் மக்கள் எண்ணுகிறார்கள்.
திமுக ஆட்சியில் ஊழல்: திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் செய்கிறார்கள். திமுகஅமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள்தூசி தட்டி விசாரிக்கப்படுகின்றன. மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் திமுக அமைச்சர்கள் எங்கு இருக்க வேண்டுமோ, அங்கு இருப்பார்கள்.
இதனால், எல்லா அமைச்சர்களும் தூக்கம் இல்லாமல் இருக்கிறார்கள். உப்பை சாப்பிட்டால் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். பாஜகவுடன் மறைமுகமாக அதிமுக உறவு வைத்துள்ளதாக கூறி வருகிறார்கள். நாங்கள் ஏற்கெனவே பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என அறிவித்துவிட்டோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் அதிமுக இல்லை.
இறுதியாகவும், உறுதியாகவும் சொல்கிறோம் அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் இல்லை, இல்லை. இது குறித்து இனி கேள்வி எழுப்ப வேண்டாம். திமுக கூட்டணி பேச்சு வார்த்தையில் இழுபறி உள்ளது. 10 நாட்களில் யாரெல்லாம் திமுக கூட்டணியில் தொடர இருக்கிறார்கள் என தெரியவரும். திமுக கூட்டணியை நம்பி உள்ளது. நாங்கள் மக்களை நம்பியுள்ளோம். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்ஜிஆர் குறித்து அவதூறாகப் பேசி உள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் அவர் வைப்புத் தொகையை இழப்பார். அவருக்கு நாவடக்கம் தேவை, திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் திருத்தப்படுவீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
விஜய்க்கு வாழ்த்து: பின்னர் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறும்போது, “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள். தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்றார்.