விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த 69 வயதான முதியவர் ஒருவருக்கு தொடர் இருமல், சளி, மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை, மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு சுவாசம் மற்றும் நுரையீரல் மருத்துவர் டாக்டர் பிரேம் ஆனந்த் அவரை பரிசோதித்தார். அப்போது, 40 ஆண்டுகளுக்கு முன் காசநோயால் பாதிக்கப்பட்டு, இடதுபக்க நுரையீரல் அகற்றப்பட்டுவிட்ட நிலையில், சில நாட்களுக்கு முன் நிலக்கடலை சாப்பிடும்போது புரை ஏறி, மூச்சுவிட சிரமப்பட்டு வந்துள்ளார் என்பது தெரிந்தது.
இதையடுத்து முதியவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தி, ப்ரோன்கோஸ்கோபி ஆய்வு செய்ததில், வலதுபக்க நுரையீரலில் நிலக்கடலை சிக்கியிருப்பது தெரியவந்தது. அதை மூன்றரை மணி நேர சிகிச்சையில் சிறிது, சிறிதாக உடைத்து அகற்றினர்.
சிக்கலான இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த டாக்டர் பிரேம் ஆனந்த் உள்ளிட்டோரை வேலம்மாள் கல்வி அறக்கட்டளைத் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம், மருத்துவமனை டீன் டாக்டர் ஆர்.எம்.ராஜா முத்தையா, மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் சோமசுந்தரம், மருத்துவ சேவைகளின் இயக்குநர் டாக்டர் செல்வக்குமார், தலைமை செயல் அலுவலர் சுப்பிரமணி, தலைமை நிர்வாக அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்டோர் பாராட்டினர்.