சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் ரூ.37 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய குழாய் இணைப்பு பணி நிறைவடையும் போது 19 லட்சம் மக்கள் பயன்பெறுவர் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் சென்னை மக்களுக்கு கூடுதலாக குடிநீர் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிக்கும் திறன் கொண்ட செம்பரம்பாக்கம் நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை வழியாக சவீதா பல் மருத்துவக் கல்லூரி வரையில், நசரத்பேட்டை, சென்னீர் குப்பம் மற்றும் பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே விடுபட்ட, 2 ஆயிரம் மிமீ விட்டமுடைய 2-வது வரிசை குழாயை 1.75 கி.மீ.நீளத்துக்கு இணைக்கும் பணிகள் ரூ.37 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
தற்போது, செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட குழாய் இணைக்கும் பணிகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் முடிக்கப்பட்டு சென்னை மக்களுக்கு மேலும், கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர், ஆகமொத்தம் நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் வழங்க இயலும். இத்திட்டத்தின் மூலம் அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் உள்ள பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், பெரும்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 19 லட்சத்து 63 ஆயிரம் மக்கள் பயன் பெறுவர்.