தமிழகம்

கும்பகோணம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான மாத்திரை வழங்கியதாக புகார்

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், சுந்தரபெருமாள் கோயில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பணியிலிருந்தவர், ரத்தக் கொதிப்பு நோயாளிக்குக் காலாவதியான மாத்திரைகளை வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் வட்டம், தாராசுரம், கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் விஜய் (55). ரத்தக் கொதிப்பு நோயாளியான இவர், கடந்த 9-ம் தேதி சுந்தரபெருமாள்கோவில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு சென்று ரத்தக் கொதிப்புக்கான மாத்திரைகள் வாங்கி வந்துள்ளார். இன்று (பிப்.10) காலை மாத்திரைகளை உட்கொள்ள, அந்த மாத்திரையின் அட்டவணையைப் பார்த்த போது, அது 2023-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் காலாவதியான மாத்திரை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விஜய், அந்த மாத்திரைகளை சாப்பிடாமல், இது தொடர்பாக மேலதிகாரிகளிடம் புகாரளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜய் கூறியது: “கும்பகோணத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் என்னை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரத்தக் கொதிப்பு இருப்பதாக தெரிவித்ததையொட்டி, கடந்த 2 ஆண்டுகளாக அதற் உண்டான மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தேன்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நோயாளியின் வீட்டிற்கே மாத்திரைகள் வரும் என்று கூறி 2 மாதங்கள் மாத்திரைகள் வீட்டிற்கு வந்து வழங்கினார்கள். பின்னர் இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், நீங்கள் அருகில் உள்ள பட்டீஸ்வரம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மாத்திரைகளை வாங்கிக்கொள்ளுங்கள்” என்றனர்.

ஆனால், பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மாத்திரைகள் இல்லை என்றும், ஆன்லைன் சிக்னலில் பிரச்சினை என்பதால் நீங்கள் சுந்தரபெருமாள்கோவில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மாத்திரைகளை வாங்கிக்கொள்ளுங்கள் என தெரிவித்தனர். அதன்படி கடந்த சில மாதங்களாக சுந்தரபெருமாள்கோவில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு சென்று ரத்தக்கொதிப்பு நோய்க்கான மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வருகிறேன்.

இந்நிலையில் கடந்த 9-ம் தேதி அங்கு சென்று வாங்கிய மாத்திரையின் அட்டையில் 2023-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் காலாவதியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிகாரிகளிடம் புகாரளிக்கவுள்ளேன்.

எனவே, அங்குள்ள மாத்திரைகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பணியிலிருக்கும் மருத்துவ பணியாளர்கள் கவனத்துடன் காலாவதி தேதியைப் பார்த்து மாத்திரைகளை வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் இது நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தாகிவிடும்” எனத் தெரிவித்தார். தஞ்சாவூர் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் கலைவாணி கூறியது, “இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT