தமிழகம்

“சீட்டு கேட்பதற்காகவே இருக்கும் ஒரு கட்சி காங்கிரஸ் தான்!” - அண்ணாமலை

செய்திப்பிரிவு

’தேர்தல் நேரத்தில் சீட்டு கேட்பதற்காக இந்தியாவில் ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சி மட்டும் தான்’ என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்டுள்ள அவர் நேற்று கும்மிடிப்பூண்டி வந்தார்.

அங்குள்ள ஜி.என்.டி., சாலையில் ரெட்டம்பேடு சந்திப்பு அருகே தொடங்கி பேருந்து நிலையம் எதிரே நிறைவு செய்தார். சுமார் ஒரு கி.மீ., தூரம் நடைபெற்ற இந்த யாத்திரையில், அண்ணாமலை பேசியதாவது: நம் தமிழ் மொழியின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் பாரத பிரதமர் மோடி.

வளர்ச்சி என்று சொன்னால் மோடி, மீனவர்கள் நலன் என்று சொன்னால் மோடி. மீனவர்கள் நலனுக்காக முதன் முதலாக தனி அமைச்சரகத்தை கொண்டு வந்தவர் மோடி. கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலைகளை கொண்டு வந்துள்ளனர். நச்சு கழிவுகளை அகற்ற தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அக்கறையில்லாமல் ஒரு அரசு இருக்கிறது என்றால் அது திமுக அரசுதான். தேர்தல் நேரத்தில் சீட்டு கேட்பதற்காக இந்தியாவில் ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சி மட்டும்தான். சேவை செய்வது என்பது காங்கிரஸ் டி.என்.ஏ.வில் இல்லை. இந்தியாவின் வளர்ச்சிக்கு யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்களின் கட்சியை பார்க்காமல் கவுரவம் கொடுப்பவர் மோடிதான். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT