எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் ஜான் விஸ்வநாத்துடன், சிறுவன் முகமது துல்கர் மற்றும் அவனது பெற்றோர். 
தமிழகம்

பிறவியிலேயே நடக்க இயலாத லட்சத்தீவு சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை: மருத்துவர் நம்பிக்கை

செய்திப்பிரிவு

திருச்சி: பிறவியிலேயே நடக்க இயலாத, லட்சத்தீவைச் சேர்ந்த 11 வயது சிறுவனுக்கு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் எழுந்து நடப்பார் என்று அரசு மருத்துவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

லட்சத்தீவு யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட ஆண்ரோட் தீவில் ஏழை தொழிலாளியான செரிய கோயா- ஹாபி ஷா தம்பதியரின் இரண்டாவது மகன் முகமது துல்கர் (11). ஹாபி ஷா கருவுற்றிருந்தபோது, 7 மாதத்தில் 700 கிராம் எடையில் இந்தக் குழந்தை பிறந்தது. பல மாதங்கள் தீவிர சிசு சிகிச்சைப் பிரிவில், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிறக்கும்போதே இரு கால்களும் பாதிக்கப்பட்டு, பின்னர் நடக்க முடியாமல் இருந்த இந்த சிறுவனுக்கு கேரளா உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும், உரிய பலனளிக்கவில்லை. இதனால் சிறுவன் துல்கர் நிற்கவோ, நடக்கவோ முடியாமல் தவித்துவந்தார்.

இந்நிலையில், பிறவியிலேயே பாதிக்கப்பட்டு நடக்க முடியாதவர்களுக்கு சிகிச்சை அளித்து, குணமாக்கி வரும் திருச்சியைச் சேர்ந்த எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணரும், அரசு மருத்துவருமான ஜான் விஸ்வநாத் குறித்து அறிந்த பெற்றோர், அவரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

இதையடுத்து, தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறுவன் துல்கரை திருச்சிக்கு அழைத்து வந்து, மருத்துவர் ஜான் விஸ்வநாத்திடம் காண்பித்து, ஆலோசனை மேற்கொண்டனர். சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர், 3 அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து, ரங்கம் அரசு மருத்துவமனையில் அந்த சிறுவனை அனுமதித்தார்.

இதுகுறித்து மருத்துவர் ஜான் விஸ்வநாத் கூறியது: சிறுவன் துல்கர் பிறவி மூட்டு இறுக்கம், பெருமூளை வாதம் தொடர்பான ‘ஸ்பாஸ்டிக் பாராப்லீஜியா’ என்ற பிறவி பாதிப்பு காரணமாக நிற்கவோ, நடக்கவோ முடியாமல் சிரமப்படுவது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, பெற்றோர்கள் சம்மதத்துடன் இரு இடுப்பு மூட்டுகள், முழங்கால் மூட்டுகள், கணுக்கால் மூட்டுகள், பாதங்கள், கால்கள், தொடைகளில் தொடர் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, டிச. 28, ஜன. 31 மற்றும் பிப்.6 ஆகிய நாட்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் 3 முதல் 4 மணி நேரம் நடைபெற்றது.

இந்த தொடர் நவீன அறுவை சிகிச்சை என்பது, தசைநார் பரிமாற்றம், தசை சமநிலை மற்றும் மறுசீரமைப்பு மற்றும் முன்பாத மறுஅமைப்பு செயல்முறைகளை உள்ளடக்கியது. பல லட்சம் செலவாகும் இந்த அறுவை சிகிச்சைகள் அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.

அறுவை சிகிச்சை காயங்கள் ஆறியவுடன், தையல்கள் பிரிக்கப்பட்டு, இயன்முறை பயிற்சி அளிக்கப்படும். அதன் பின்னர், விரைவில் சிறுவன் எழுந்து நடப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரபல தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய இந்த அறுவை சிகிச்சை, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT