தமிழகம்

கராத்தே மாஸ்டருக்கு எதிராக பொய் புகார் அளிக்க வைத்தவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கராத்தே மாஸ்டருக்கு எதிராக பொய் புகார் அளிக்க வைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூரில் கராத்தே வகுப்பு நடத்திவரும் கராத்தே மாஸ்டர் தர்மராஜன், தன்னிடம் கராத்தே பயிற்சிபெற வந்த சிறுமிகளுக்கு பாலியல்தொந்தரவு கொடுத்ததாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தர்மராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர்தரப்பில் முன்விரோதம் காரணமாக சிலர் தனக்கு எதிராக அந்த சிறுமிகளைத் தூண்டிவிட்டு பாலியல் தொந்தரவு அளித்ததாக பொய் புகார் அளித்ததாக வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதி, அந்த 3 சிறுமிகளையும் பெற்றோருடன் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

பின்னர் அந்த சிறுமிகளிடம் தனது சேம்பரில் வைத்து வாக்குமூலம் பெற்றார். அப்போது அந்தசிறுமிகள் தங்களுக்கு தர்மராஜன்எந்தவொரு பாலியல் துன்புறுத்தலும் அளிக்கவில்லை என்றும்,அரவிந்தன், பிரதீப் ஆகியோர் தூண்டுதலின் பேரில்தான் தர்மராஜனுக்கு எதிராக புகார் அளித்ததாகவும், அந்த புகாரில் என்னஎழுதப்பட்டு இருந்தது என்பதுகூடதங்களுக்குத் தெரியாது என்றும், வெற்று காகிதத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.

அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, கராத்தே மாஸ்டர் தர்மராஜனுக்கு எதிராக போக்சோ மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், போக்சோ சட்டத்தை தவறாகப் பயன்படுத்திய அரவிந்தன், பிரதீப் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் பிரிவு 22-ன்கீழ் 4 வாரத்துக்குள் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கபெரம்பலூர் அனைத்து மகளிர்போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் நடந்த உண்மையைக்கூறி தர்மராஜனுக்கு ஏற்பட்டஇழுக்கை துடைத்த சிறுமிகளுக்கும் நீதிபதி வாழ்த்து தெரிவித்தார்.

SCROLL FOR NEXT