மேட்டூர் அணையில் நேற்று ஆய்வு மேற்கொண்ட தமிழக நீர்வள துறைச் செயலர் சந்தீப் சக்சேனா. உடன், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மற்றும் அதிகாரிகள். 
தமிழகம்

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து நீர் திறப்பது இன்று நிறுத்தம்: நீர்வளத் துறை செயலர் தகவல்

செய்திப்பிரிவு

மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து காவிரிடெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது பிப். 9-ம் தேதி (இன்று) மாலைக்குள் நிறுத்தப்படும் என்று நீர்வளத் துறைச் செயலர் சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த 5 நாட்களாக விநாடிக்கு 5,000கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக நீர்வளத் துறைச் செயலர் சந்தீப் சக்சேனா நேற்று மேட்டூர் அணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அணையின் வலது, இடது கரை, கீழ்மட்ட மதகுகள், 16 கண் மதகுகள், பூங்கா உள்ளிட்ட பகுதிகளை அவர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, அணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது, சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர், நீர்வளத் துறைச் செயலர் சந்தீப் சக்சேனா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர், டெல்டா மாவட்டங்களைச் சென்றுள்ளதா என்பதுகுறித்து, மேட்டூர் அணையில் இருந்து திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறேன்.

டெல்டா பாசனத்துக்கு தண்ணீர்திறக்கப்படுவது பிப். 9-ம் தேதி(இன்று) மாலைக்குள் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழைக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், மேட்டூர் அணையில் நடைபெற்று வரும் பராமரிப்பு, புனரமைப்புப் பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவுபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT