கோவை: கோவையில் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை செளரிபாளையத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியே வரும் கழிவுகள் அதே பகுதியில் 11 அடி ஆழத்தில் கழிவுநீர் தொட்டியில் ( செப்டிக் டேங்க் ) சேமிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக 2 வாரத்துக்கு ஒருமுறை அந்த கழிவுகள் அனைத்தும் சுத்தம் செய்யப்படும். அதன்படி, நேற்று காலையில் கழிவுகளை சுத்தம் செய்ய கோவை சுங்கம் சிவராம் நகரை சேர்ந்த மோகன சுந்தரலிங்கம் ( 37 ), ராமு ( 21 ), குணா ( 20 ) ஆகியோர் அங்கு சென்றனர்.தொட்டியின் மூடியை அகற்றிவிட்டு, உள்ளே தேங்கி இருந்த கழிவுகளை சுத்தம் செய்தனர்.
மாலை வரை 5 லோடு கழிவுகள் அகற்றப்பட்டன. மீதம் 4 அடி வரை தேங்கியிருந்த கழிவுகளை சுத்தம் செய்வதற்காக ராமு, குணா ஆகியோர் தொட்டிக்குள் இறங்கினர். மோகன சுந்தரலிங்கம் மேல் பகுதியில் நின்று கொண்டு அவர்களை கவனித்துக் கொண்டு இருந்தார். அப்போது தொட்டிக்குள் விஷவாயு தாக்கியதால், அதை தாங்க முடியாமல் ராமுவும், குணாவும் மயங்கி விழுந்தனர். அதை பார்த்த மோகன சுந்தரலிங்கம் அதிர்ச்சி அடைந்து உள்ளே இறங்கி 2 பேரையும் மீட்க முயற்சி செய்தார்.
அப்போது அவரும் மயங்கினார். அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் 3 பேரையும் மீட்டு, ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் மோகன சுந்தரலிங்கம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். குணா, ராமு ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.