சேலம்: சேலம் மாவட்டத்தில் 10 கோயில்களுக்கு சொந்தமான ரூ.120 கோடி மதிப்புள்ள 119.72 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் போலீஸார் உதவியுடன் மீட்டனர்.
சேலம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட 10 கோயில்களுக்கு சொந்தமான 119.72 ஏக்கர் நிலம் பல்வேறு தரப்பினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இதுசம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிமன்ற உத்தரவின் படி, உதவி ஆணையர் ராஜா தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு, ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை அப்புறப்படுத்தி சுவாதீனம் செய்ய உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தெசவிளக்கு கிராமத்தில் உள்ள உலகேஸ்வரர் கோயில், படவேட்டியம்மன் கோயில், சென்றாய பெருமாள் கோயில், காட்டு சென்றாயப் பெருமாள் கோயில், வெள்ளக்கல்பட்டி சென்றாய பெருமாள் கோயில், அணை முனியப்பன் கோயில், தெசவிளக்கு மாரியம்மன் கோயில், அணை விநாயகர் கோயில், துட்டம்பட்டி மாரியம்மன் கோயில் உள்பட பத்து கோயில்களுக்கு சொந்தமான 119.72 ஏக்கர் நிலத்தை 36 பேர் ஆக்கிரமித்து அனுபவித்து வந்தனர்.
இக்கோயில் நிலங்களை உதவி ஆணையர் ராஜா தலைமையிலான குழுவினர் நேற்று காவல், தீயணைப்பு, வருவாய் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அரசுத் துறைு அலுவலர்களுடன் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றி சுவாதீனம் செய்தனர். இது குறித்து சேலம் மாவட்ட உதவி ஆணையர் ராஜா கூறும் போது, சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட இந்து சமய அறநிலையத் துறை கட்டுப் பாட்டில் ஓமலூர், தெசவிளக்கு வட்டத்தில் உள்ள 10 கோயில்களுக்கு சொந்தமான ரூ.120 கோடி மதிப்பிலான 119 ஏக்கர் 72 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது.
காவல் துறை உதவியுடன் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்டு சுவாதீனம் செய்து எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது குறித்து ஆய்வு செய்து, சுவாதீனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.