தமிழகத்தை ஏமாற்றும் விதமாக மத்திய பட்ஜெட் இருப்பதாக கூறி, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு வந்த பயணிகளிடம் அல்வா பாக்கெட்டுகளை வழங்கிய திமுகவினர். | படம்: எம்.முத்துகணேஷ் | 
தமிழகம்

தமிழகத்துக்கு நிதி கொடுக்காத மத்திய அரசை கண்டித்து பொதுமக்களிடம் அல்வா கொடுத்து போராட்டம்

செய்திப்பிரிவு

கிளாம்பாக்கம்: தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிதி உதவி வழங்காத மத்திய அரசை விமர்சிக்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு துண்டு பிரசுரத்தோடு திமுகவினர் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் டிச. 4-ம் தேதி ஒரே நாளில் கனமழை பெய்தது. அதைத் தொடர்ந்து டிச. 17, 18-ம் தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெய்த மிகத் தீவிர மழை 4 மாவட்டங்களையும் புரட்டிப்போட்டுவிட்டது.

இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். பொதுமக்கள் பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப 10 நாட்களுக்கு மேல் ஆனது. இதனையடுத்து வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு ரூ.6 ஆயிரம் வழங்கியது. மேலும் தமிழக வெள்ள பாதிப்பை சென்னை மற்றும் தூத்துக்குடியில் மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோரும் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். இதை தொடர்ந்து மத்திய அரசிடம் தமிழக அரசு ரூ.37,000 கோடி கேட்டது. ஆனால் உரிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என மக்களவையில் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மத்திய அரசின் செயல்பாட்டை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் காஞ்சி வடக்கு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய திமுக சார்பாக அல்வா கொடுக்கும் நூதன போராட்டம் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இதில் பேருந்து நிலையத்தில் பயணிகள், ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்களுக்கு அல்வா வழங்கினர். மேலும் அல்வாவோடு நோட்டீஸ் ஒன்றையும் இணைத்து வழங்கினர். அதில் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய நிதி பூஜ்யம் (ZERO) என அச்சடித்து அதில் ஒரு அல்வா துண்டை இணைந்து வழங்கினர்.

SCROLL FOR NEXT