சென்னை: இந்து அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் 7 கோயில்களில் மகாசிவராத்திரி விழா மார்ச் 8-ம் தேதிவெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார். கூட்டத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான கோயில்களை புனரமைக்கும் வகையில் ரூ.304.84கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் 197 கோயில்களின் திருப்பணிகளில், 16 கோயில்களில் பணிகள் முடிவுற்றுள்ளன.
இந்நிலையில், இதர தொன்மையான கோயில்களில் நடைபெற்றுவரும் திருப்பணிகளின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் இரண்டாம் கட்டப் பயணத்தை 200 பக்தர்களுடன் பழனி தண்டாயுதபாணி சுவாமிகோயிலிலிருந்து தொடங்குவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
அதேபோல், மகா சிவராத்திரி விழா மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், பேரூர் பட்டீஸ்வரர் கோயில்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்: இந்தாண்டு கூடுதலாக, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மற்றும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் ஆகிய 2கோயில்களையும் சேர்த்து 7கோயில்களில் வருகின்ற மார்ச்8-ம் தேதி மகா சிவராத்திரி பெருவிழாவை ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக கொண்டாடிட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.