நரேந்திர மோடி ரஜினிகாந்த் சந்திப்பு, தேர்தலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
சென்னை கமலாலயத்தில் அவர் அளித்த பேட்டி: மல்லிப்பட்டினத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் உள்ளிட்டோரை ஒரு கும்பல் தாக்கி, வன்முறையில் ஈடுபட்டுள்ளது. வேட்பாளர்கள் மீதான தாக்குதல் தேவையில்லாத பதற்றத்தைத்தான் ஏற்படுத்தும். எனவே, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையமும் மாநில அரசும் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நரேந்திர மோடி பற்றி ரஜினிகாந்த் தனது மனதில் என்ன கருத்து வைத்துள்ளார் என்பதை மக்கள் உணர்வார்கள். அதனால், இந்த சந்திப்பு தேர்தலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நரேந்திர மோடி புதன்கிழமை தமிழகத்துக்கு மீண்டும் வருகிறார்.
புதன்கிழமை கிருஷ்ணகிரி, சேலம், கோவை ஆகிய இடங்களில் நடக்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அன்றிரவு கோவையில் தங்கும் மோடி, மறுநாள் தமிழகத்தின் சில நகரங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பாஜக முன்னாள் தலைவர் நிதின்கட்கரி 16-ம் தேதியும், மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி 18-ம் தேதியும், வெங்கய்ய நாயுடு 17, 18, 19 தேதிகளிலும், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் 18-ம் தேதியும் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளனர்.
இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.