மதுரை: அதிமுக கூட்டணி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்தது, அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அதிமுககூட்டணி குறித்து (பாஜக கதவு திறந்து இருக்கும்) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த கருத்து, அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி தனிப் பெரும்பான்மை பெறும். எல்.முருகனுக்கு மத்திய அமைச்சராக இருக்கத் தகுதி இல்லை என்று டிஆர்.பாலு கூறியது தொடர்பான செய்தியை நான் முழுமையாகப் பார்க்கவில்லை.
அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் தங்கள் பக்கம்தான் இருக்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது தவறு. அவர்களின் பக்கம் கூலி ஆட்கள்தான் இருக்கின்றனர். யாரிடம் உண்மையான தொண்டர்கள் இருக்கின்றனர் என்பது மக்களவைத் தேர்தலில் தெரியவரும்.
நாங்கள் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறோம். விலகிச் சென்றிருப்பது பழனிசாமி அணிதான். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.