தமிழகம்

சென்னையில் பிப்.11-ம் தேதி அண்ணாமலை யாத்திரை: அனுமதி கேட்டு காவல் ஆணையரிடம் பாஜகவினர் மனு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளவுள்ள யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கோரி, அக்கட்சியினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

பாஜக மாநில நிர்வாகிகள் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், மூத்த வழக்கறிஞர் பால் கனகராஜ் உள்ளிட்டோர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளிடம் நேற்று மனு ஒன்றை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கரு.நாகராஜன் கூறியதாவது: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். வரும் 11-ம் தேதி (ஞாயிறு)சென்னை வாலாஜா சாலையில் அவரது யாத்திரை நடக்க இருக்கிறது.

எனவே வாலாஜா சாலையில் யாத்திரை செல்ல அனுமதி கேட்டுகாவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளோம். இந்த சாலையில் எல்லாகட்சியினரும் ஊர்வலம் நடத்துகின்றனர். எனவே அண்ணாமலை பங்கேற்கும் யாத்திரையை அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளோம்.

நட்டா பங்கேற்கும் பொதுக்கூட்டம்: மேலும், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்ளும்பொதுக்கூட்டமும் சென்னையில் நடக்க இருக்கிறது. அந்தக் கூட்டத்தை மடிப்பாக்கம், தியாகராயநகர், தங்கசாலை, கீழ்ப்பாக்கம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு இடத்தில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளோம். போலீஸாரின் அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை தேசிய தலைமைதான் முடிவு செய்யும். அவர்கள் எடுக்கும் முடிவின் அடிப்படையில் எங்கள் கட்சியின் கூட்டணி அமையும்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜூ ஆகியோர் ஒவ்வொருவரும் அவரவர் கருத்துகளைக் கூறுகின்றனர். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கருத்தைத்தான் இறுதியானதாகப் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT