நாகர்கோவில்: கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடலில் ஏற்றப்பட்ட ராமர் கொடி அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் அதே கம்பத்தில் காவிக்கொடி ஏற்றப்பட்டது.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கடலுக்குள் உள்ள பாறையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கொடிக் கம்பம் நடப்பட்டு காவிக் கொடி பறந்து கொண்டிருந்தது. அயோத்தியில் கடந்த மாதம் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்த போது, கன்னியாகுமரியில் காவி கொடி அகற்றப்பட்டு, அந்த இடத்தில் ராமர் உருவம் பொறித்த புதிய காவி கொடி ஏற்றப்பட்டது. அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பாஜக பார்வையாளர் சுபாஷ் தலைமையில், மாவட்ட பாஜக தலைவர் தர்ம ராஜ் இந்த கொடியை ஏற்றி வைத்தார்.
முக்கடல் சங்கமத்தில் ராமர் உருவத்துடன் காவி கொடி பறப்பது குறித்து சமூக வலை தளங்களில் சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து ராமர் உருவம் பொறித்த கொடியை நேற்று முன்தினம் மாலை போலீஸார் அகற்றினர். ஆனால், இரவோடு இரவாக மீண்டும் இந்து அமைப்பினர் அதே கம்பத்தில் காவி கொடியை ஏற்றினர். காலையில் காவி கொடியை போலீஸார் மீண்டும் அகற்றினர். சற்று நேரத்தல் அதே கம்பத்தில் மீண்டும் காவி கொடியை இந்து அமைப்பினர் ஏற்றினர்.
பதற்றமான சூழல் நிலவியதால் போலீஸார் குவிக்கப் பட்டனர். முக்கடல் சங்கமத்தில் பல ஆண்டுகளாக இருந்த காவி கொடியை அகற்றினால், குமரி மாவட்டத்தில் கடல் பாறைகளில் அமைக்கப் பட்டுள்ள பிற கொடி, மதம் சார்ந்த சின்னங்கள், அடையாளங்களையும் அகற்ற வேண்டும். இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபட போவதாக பாஜக, இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.