மதுரை: மதுரை கே.கே.நகர் குடிசைமாற்று வாரியம் (தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) அலுவலகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த அவனியாபுரம் குடிசை மாற்று வாரியம் வீடுகள் ஏலம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதிருப்தியடைந்த பயனாளிகள் குடும்பத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை கண்டித்து மதுரை கே.கே.நகர் சாலையில் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை அவனியாபுரத்தில் மாநகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், அவர்கள் குடும்பத்தினர் குடிசைகளில் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் 64 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகள் கட்டி முடித்து, பயனாளிகளுக்கு இன்று குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்படுவதாக இருந்தது. மக்கள், தங்களுக்கான வீடுகளை தேர்ந்தெடு்க்க தங்கள் குடும்பத்தினருடன், மதுரை கே.கே.நகரில் உள்ள வீட்டு வசதி வாரியம் அலுவலகத்தில் திரண்டனர்.
ஆனால், அதிகாரிகள் நீதிமன்றத்தில் உங்களில் ஒருவர் வழக்கு தொடர்ந்து இருப்பதால் இன்று நடைபெற இருந்த குலுக்கல் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தனர். வீடுகள் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் வந்த மக்கள், குலுக்கல் ரத்து செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் அலுவலகம் முன் மதுரை கே.கே.நகர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீஸார், அவர்களை குடிசை மாற்று வாரியம் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைத்துச் சென்றனர்.
வழக்கு இருப்பதால் குலுக்கல் நடத்த வாய்ப்பில்லை என்றும், நீதிமன்றம் வழிகாட்டுதலுடன் விரைவில் குலுக்கில் முறையில் வீடுகள் ஒதுக்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால், அதற்கு சம்மதிக்காத மக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதன்பிறகு அதிகாரிகள் மேல் அதிகாரிகளிடம் பேசிவிட்டு நாளை (வியாழக்கிழமை) குலுக்கல் நடத்துவதாக கூறியதால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.