தமிழகம்

அதிமுக உள்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தசூரியமூர்த்தி, கடந்த 2021-ம்ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு,உள்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. கட்சி விதிகளின்படி அனைத்து அடிப்படைஉறுப்பினர்களும் வாக்களித்துதான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆனால், தற்போது அதுபோன்ற சூழல் அதிமுகவில் இல்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், உள்கட்சி தேர்தலை கட்டாயம் நடத்த வேண்டும். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த பதிலும் இல்லை. எனவே, அதிமுகவில் உள்கட்சி தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகளை நியமிக்கக்கூடாது என தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் நேரில் ஆஜராகி, ‘‘அதிமுகவில் உள்கட்சி தேர்தல் முறையாகநடைபெறவில்லை. சர்வாதிகார முறையில் தேர்தல் நடைபெற்றதால் நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும்’’ என்றார்.

சின்னம் குறித்து தலையிடலாம்: தேர்தல் ஆணையம் தரப்பில்ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன்ராஜகோபாலன், ‘‘அதிமுகவில் உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கட்சியின் உள்கட்சி விவகாரத்துக்குள் தேர்தல்ஆணையம் தலையிட முடியாது. சின்னம் தொடர்பான விவகாரத்தில் மட்டுமே தேர்தல் ஆணையம் தலையிட முடியும்’’ என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘இந்த வழக்கில் பிரதிவாதியாக அதிமுகவை மனுதாரர் சேர்க்கவில்லை. மேலும், உள்கட்சி தேர்தல் நடந்து முடிந்து அதிமுகவின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால் இதில் தலையிட்டு மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனுதாரர் இதுதொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை நாடி பரிகாரம் தேடலாம்’’ என அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT