தமிழகம்

குடும்ப உறுப்பினர்களின் கைரேகையை பதியாவிட்டால் ரேஷன் பொருட்கள் அளவு குறைக்கப்படும்: கடை ஊழியர்கள் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் தங்கள் கைரேகையை ரேஷன் கடைகளில் பதிவு செய்யாவிட்டால், பொருட்கள் குறைக்கப்படும் என்று கடை ஊழியர்கள் தெரிவித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில், தற்போது 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51, 954 பயனாளிகள் பயன்பெறுகின்றனர். இவர்களில் 6 கோடியே 96 லட்சத்து 47,407 பேர் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

மொத்தமுள்ள குடும்ப அட்டைகளில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் 18.61 லட்சம் குடும்ப அட்டைகளும், முன்னுரிமைபெற்ற 95.67 லட்சம் குடும்ப அட்டைகளும் உள்ளன.

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உணவுப்பொருள் வழங்கல் திட்டம் கணினிமயமாக்கப்பட்டு, ஆதார் இணைக்கப்பட்டுள்ளதாலும், கைரேகைப் பதிவின் மூலம் பொருட்கள் வழங்கப்படுவதாலும், யார் வேண்டுமானாலும் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம் என்ற நிலை உள்ளது.

பதிவு செய்யவில்லை: இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் விரல் ரேகையை பதிவுசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. குறிப்பிட்ட சதவீதத்தினர் மட்டுமே இதனை மேற்கொண்டனர். மற்றவர்கள் யாரும் பதிவு செய்யாமல் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது, குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் கட்டாயம் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பொருட்கள் அளவு குறைக்கப்படும். பெயர் நீக்கப்படும் என்றும் ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவிப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து, கடை ஊழியர்களிடம் கேட்டபோது,” கடந்த 6 மாதங்கள் முன் இதுபோன்ற உத்தரவு வந்தது. அப்போதே பொதுமக்களிடம் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலானவர்கள் பதிவு செய்யவில்லை. தற்போது மீண்டும் உத்தரவு வந்துள்ளது. இதைதான் நாங்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் தெரிவித்துள்ளோம்” என்றனர்.

இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரியிடம் கேட்டபோது, “மத்திய அரசு முன்னுரிமை குடும்ப அட்டை பயனாளிகளின் விவரங்களை ஆண்டுதோறும் சரிபார்க்க அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது, முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களையும் சரிபார்க்கும் வகையில், இந்த பதிவு நடைபெறுகிறது. யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்றும் அவர்கள் வராவிட்டால் வீட்டுக்கே சென்று விரல் ரேகை பதிவை பெறவும், தேவைப்பட்டால் முகாம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT