சென்னை: புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பாக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரை முருகனுக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத் துறையின் மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெறக்கோரும் மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த முந்தைய அதிமுக ஆட்சியில் உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி அது தொடர்பான அரசின்உத்தரவை ஏற்கெனவே ரத்துசெய்து உத்தரவிட்டிருந்தார்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்வர் மற்றும் அமைச்சருக்கு எதிராக உள்ள இந்த மனுவை வாபஸ் பெற அனுமதிக்கக் கோரி லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் தன்னையும் இந்த வழக்கில் இணைக்க கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயவர்தன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, பொது நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் தொடர்பான வழக்கை வாபஸ் பெற அரசுக்கு அதிகாரம் இல்லை.
முறைகேடு புகார் தொடர்பாக வெளிப்படையான புலன் விசாரணை நடத்தி அதில் முடிவு காண அனுமதிக்க வேண்டுமேயன்றி, விசாரணையை கைவிட முடியாது. எனவே தமிழக முதல்வர் மற்றும் அமைச்சருக்கு எதிரான இந்த மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதிக்கக் கூடாது என வாதிட்டார்.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஒரு வழக்கை திரும்பப் பெறுவது என்பது அரசின் முடிவு. இதில் தலையீடு செய்ய முடியாது. இடையீட்டு மனுதாரருக்கு வேறு மாற்று நிவாரண வழிகள் உள்ளன என்றார்.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், லஞ்ச ஒழிப்புத் துறையின் மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற அரசுக்கு அதிகாரம் உள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் ஜெயவர்தன் தாக்கல் செய்துள்ள இந்த மனுவை ஏற்கக்கூடாது என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.