சென்னை குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதை பணி 15 ஆண்டு களுக்கும் மேலாக நடந்துவருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.படம்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

ராதா நகர் சுரங்கப்பாதை மே மாதம் பயன்பாட்டுக்கு வரும்: பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி தகவல்

செய்திப்பிரிவு

குரோம்பேட்டை: குரோம்பேட்டை, ராதா நகர் ரயில்வே கேட் அமைந்துள்ள பகுதியை சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை எழுந்ததையடுத்து கடந்த 2007-ல் சுரங்கப்பாதைப் பணிகள் தொடங்கப்பட்டன. இதில்ரயில்வே பகுதியில் பணிகள் முடிந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டன.

பின்னர் 2019-ம்ஆண்டு ஜூன் மாதத்தில், ரூ. 15.47 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு நெடுஞ்சாலைத் துறை பணிகள் தொடங்கின. தற்போது 80 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன. சுரங்கப்பாதை மையப்பகுதியில் நடைமேம்பாலத்தில் துாண்கள் உள்ளதால், அவற்றை அகற்ற வேண்டியுள்ளது. மேற்கு பகுதியில்20 சதவீத பணிகள் மட்டுமே உள்ளன.

இந்நிலையில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகள், இப்பணிகளை நேற்று ஆய்வு செய்தனர். இந்த சுரங்கப்பாதை இருவழிப்பாதை கொண்டது. இதற்கு ஏற்றார் போல் வரைப்படம்தயார் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி, பணிகளை வேகப்படுத்தி மே மாதம் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் ராதா நகர் சுரங்கப்பாதை திட்டம் முடிந்தவுடன் வைஷ்ணவா ரயில்வே கேட்டில் ரூ.30 கோடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது என பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT