சென்னை: சென்னை ராயப்பேட்டையில் வசிப்பவர் கவுரி ஜனார்த்தன். இவர், அண்ணாசாலை காவல் நிலையத்தில் அண்மையில் புகார் ஒன்று அளித்தார். அதில், ‘எனது சகோதரி ஷெரின் சாம் (38), தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
இவரது கார் ஓட்டுநராக கார்த்திக் என்பவர் பணிபுரிந்தார். கடந்த ஜனவரி 7-ம் தேதி இரவு ஷெரின் வீட்டில் தனியாக இருக்கும்போது, மதுபோதையில் வந்த கார்த்திக்கும், அவரது கூட்டாளிகளும் அத்து மீறி நுழைய முயன்று தகராறு செய்துள்ளனர்.
பின்னர் ஷெரினை வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு, ஜனவரி 7-ம் தேதி இரவு நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் அத்துமீறி நுழைதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், காரத்திக்கையும், அவரது கூட்டாளிகளையும் தேடி வந்தனர். இந்நிலையில், கார்த்திக், அவரது கூட்டாளி இளையராஜா ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும், இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.