நடிகை ஸ்ரீதேவி சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அவரது தந்தை ஐயப்பன் வழக்கறிஞர். தாய் ராஜேஸ்வரி இல்லத்தரசியாக குடும்பத்தை கவனித்து வந்தார். கலைத்துறை மீது அந்த குடும்பத்துக்கு இருந்த ஆர்வத்தால், 4 வயது குழந்தையான ஸ்ரீதேவியை சினிமாவுக்கு கொண்டு வந்தனர்.
அம்மா - மகள் பாசம்
குழந்தை நட்சத்திரம் தொடங்கி நாயகியாக தனி அடையாளம் பெற்ற பிறகும்கூட, எங்கு படப்பிடிப்பு என்றாலும் நடிகை ஸ்ரீதேவி, தன் தாய் ராஜேஸ்வரியை ஒரு தோழியைப் போல உடன் அழைத்துச் செல்வார். தாய் மீது அளவுகடந்த பாசம் கொண்டவர் ஸ்ரீதேவி. கடந்த ஆண்டில் வெளியான ‘மாம்’ படத்தின் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்த அவர், ‘‘என் வளர்ச்சிக்கு அம்மாதான் முக்கிய காரணம். அந்த பொறுப்பை இப்போது என் மகள்கள் மீது செலுத்துகிறேன்’’ என்றார்.
‘‘குழந்தை நட்சத்திரமாக இருந்த எனக்கு நாயகியாக ஒரு அடையாளம் கிடைக்க தூண்டுகோலாக இருந்தது சாவித்ரியின் நடிப்புதான்’’ என்றும் பல மேடைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல் வேறு மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இதில் தமிழில் மட்டுமே 69 படங்கள். விஜய் நடிப்பில் வெளிவந்த ‘புலி’ அவரது கடைசி தமிழ்ப் படம்.
விருதுகள் பட்டியல்
‘மூன்றாம் பிறை’ படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது கமல்ஹாசனுக்கு மட்டுமே விருது கிடைத்தது. அதேநேரம், தமிழக அரசின் சிறந்த நடிகை விருது அப்படத்துக்கு வழங்கப்பட்டது.
‘மீண்டும் கோகிலா’, ‘சால்பாஸ்’, ‘மிஸ்டர் இந்தியா’, ‘நாகினி’ உள்ளிட்ட 6 படங்களுக்கு ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார்.
2012-ல் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் நடித்ததற்காக, சிறந்த பொழுதுபோக்கு அம்சம் உள்ள படம் என்ற பிரிவில் விருது பெற்றார். 2013-ல் மத்திய அரசு சார்பில் திரையுலக சாதனைக் காக பத்மஸ்ரீ விருது பெற்றார். இதுதவிர, ‘அல்டிமேட் திவா’ விருது, ஸ்மிதா பாட்டீல் நினைவு விருது, ஆந்திர மாநிலத்தின் கலா சரஸ்வதி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
பாலிவுட்டில் ஜொலித்தார்
ஸ்ரீதேவி, வைஜெயந்தி மாலா, ஹேமமாலினி, பானுரேகா, வஹிதா ரஹ்மான் உள்ளிட்ட நடிகைகள் தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட் சினிமா உலகில் தனித்த முத்திரை பதித்தனர். இதில் ஸ்ரீதேவியின் இடம் குறிப்பிடத்தக்கது. நடிப்பு, தயாரிப்பு, சின்னத்திரை பயணம் என்று இந்தியில் தனது சிறப்பான பங்களிப்பை உருவாக்கி முதல் இடத்தில் நின்றார்.
3 தலைமுறையுடன் பயணம்
தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, தெலுங்கில் என்டிஆர் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஆரம்ப நாட்களில் நடித்த ஸ்ரீதேவி 80-களின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அமிதாப் பச்சன் ஆகியோருடன் நடித்தார். தற்போதைய முன்னணி நடிகர்களான விஜய், அஜித் ஆகியோருடனும் பயணித்த நடிகை என்ற தனித்த அடையாளம் ஸ்ரீதேவிக்கு உண்டு.
‘16 வயதினிலே’ - மயிலு, ‘மீண்டும் கோகிலா’, ‘ப்ரியா’, ‘ஜானி’ - அர்ச்சனா, ‘மூன்றாம் பிறை’ - விஜி என தான் நடித்த கதாபாத்திரங்களை ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக பதித்தவர்.
கடைசி நிகழ்ச்சி
துபாயில் உறவினரது திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்ரீதேவி, அங்கு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ‘வெட்டிங் வேர்’ எனப்படும் லெஹங்கா உடையில் தோன்றி நடனம் ஆடினார். இதுதான் அவர் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி.