சென்னை: ரத்த சோகை பாதிப்பை பள்ளி அளவிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க மாணவர்களுக்கு பொது சுகாதாரத்துறை பரிசோதனை செய்து வருகிறது.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் 50 வயதுக்குள் இருப்பவர்களுக்கான ரத்த சோகை பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக ஆண்களில் 4-ல் ஒருவருக்கும் பெண்களில் 50 சதவீதத்தினருக்கு அத்தகைய பாதிப்பு இருப்பதாகவும் பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மாதவிடாய், மகப்பேறு போன்ற காரணங்களால் பெண்களுக்கு ரத்த சோகை பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
57 சதவீதத்தினருக்கு ரத்த சோகை: இந்நிலையில், தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளிடம் ரத்தசோகை பாதிப்பு குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதுவாரை 8.7 லட்சம் மாணவிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் 57 சதவீதத்தினர் ரத்த சோகை பாதிப்புடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதில், 2 சதவீத பெண்களுக்கு தீவிர பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல், 6.83 லட்சம் மாணவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 43 சதவீத பேருக்கு பாதிப்பும், ஒரு சதவீதத்தினருக்கு தீவிர பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “ரத்த சோகை பாதிப்பை பள்ளி அளவிலேயே மாணவர்களிடம் கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தீவிர பாதிப்பு கண்டறியப்பட்ட 11,253 பேருக்கு தொடர் சிகிச்சை மற்றும் ஊசி மூலமாக இரும்பு சத்து மருந்துகள் உடலில் செலுத்தப்பட்டு வருகிறது” என்றார்.