புதுச்சேரி: படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் விஜய்யைக் காண ரசிகர்கள் திரண்டதால், புதுச்சேரி - கடலூர் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கித் தவித்தனர்.
புதுச்சேரியில் முக்கிய பஞ்சாலையாக விளங்கிய ஏஎஃப்டி தற்போது மூடப்பட்டுள்ளது. இங்குபடப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கோட்’ திரைப்படத்துக்காக புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள ஏஎஃப்டி பஞ்சாலையில் படப்பிடிப்பு அரங்கு அமைக்கப்பட்டு, காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
ரசிகர்கள் குவிந்தனர்: ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சி தொடங்கி தலைவரான பிறகு நடிகர் விஜய் படப்பிடிப்புக்காக புதுச்சேரி வந்ததால் ஏஎஃப்டி பஞ்சாலை முன்பு நேற்று முன்தினம் ரசிகர்கள், ரசிகைகள் குவிந்தனர். அப்போது, விஜய் வேனில் ஏறி கை அசைத்தார். வேனில் நின்றவாறு ரசிகர்களுடன் செல்ஃபியையும், வீடியோவையும் எடுத்தார்.
இந்நிலையில், 2-ம் நாளாகநேற்றும் விஜய்யைப் பார்க்க ஏஎஃப்டி பஞ்சாலை முன்பு ரசிகர்கள்குவிந்தனர். அதைத்தொடர்ந்து வாயில் முன்பு பெரிய வேன் நிறுத்தப்பட்டு, அதில் ஏறி விஜய் தனதுரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். அவரைப் பார்த்தவுடன் ரசிகர்கள் பூக்கள் வீசினர், பலூன்களைப் பறக்க விட்டனர்.
அப்போது ரசிகர்கள் சிலர் ஏஎஃப்டி சுவற்றின் மீது ஏறத்தொடங்கினர். அவர்களை போலீஸார் தடியால் அடித்து தடுத்து நிறுத்தினர். ரசிகர்களைச் சந்தித்தபின் விஜய் மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விட்டார்.
கடலூர் சாலையில் ரசிகர்கள் குவிந்ததால் அப்பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மாலையில் பள்ளி, கல்லூரி, அலுவலகம் முடிந்து செல்லும் மக்கள் நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர். ஒரு மணி நேரத்துக்குப் பிறகே போக்குவரத்து சீரானது.
முதல்வர் ரங்கசாமி வாழ்த்து: நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏற்கெனவே விஜய் கட்சி நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் மூலம் நடிகர் விஜய்யை, முதல்வர் ரங்கசாமி நேரில் சென்று சென்னையில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.