இதய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, இதய தசைகள் வீக்கம் அடைந்து பாதிக்கப்பட்டவரை, சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் 3 மணி நேர பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினர்.
சின்ன காஞ்சிபுரம் அஸ்தகிரி தெருவைச் சேர்ந்தவர் கண்ணாமூர்த்தி (61). தனியார் கேன்டீனில் பணியாற்றுகிறார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். வேலை விஷயமாக சென்னைக்கு வந்த கண்ணாமூர்த்திக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. ஊர் திரும்பிய பிறகும், நெஞ்சு வலி, மூச்சுத்திணறல் இருந்ததால் தனியார் மருத்துவ மனைக்கு சென்றுள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப் பது பரிசோதனையில் தெரிய வந்தது.
இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், இதயத்தில் உள்ள ஒரு ரத்தக் குழாயில் முழுவதுமாக அடைப்பு ஏற்பட்டிருப்பதும், 2 ரத்தக்குழாய்களில் பகுதி அடைப்பு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. முழுவதுமாக அடைப்பு இருந்த ரத்தக்குழாயில் இருந்து ரத்தம் செல்லாததால், இதயத்தின் ஒரு பகுதி தசைகள் செயல்படாமல், வீங்கி இருந்தன. இதனால் இதயம் பலவீனம் அடைந்து 70 சதவீதம் அளவுக்கு செயல்படாமல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இதய அறுவை சிகிச்சை துறைத் தலைவர் பா. மாரியப்பன் தலைமையில் டாக்டர்கள் இளவரசன், கணேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தனர். இதயத்தில் தனி அறை போல் ஒன்றை உருவாக்கி, பலவீனம் அடைந்து செயல்படாமல் இருந்த தசைகளை சவ்வு மூலம் தனியாக பிரித்தனர். பின்னர் பகுதி அடைப்பு ஏற்பட்டிருந்த 2 ரத்தக்குழாய்களின் அடைப்பை சரிசெய்தனர். இந்த அறுவை சிகிச்சை சுமார் 3 மணி நேரம் நீடித்தது. டாக்டர்களுக்கு உதவியாக செவிலியர் ஜமுனா, தொழில்நுட்பனர்கள் மலர், செல் வம் ஆகியோர் செயல்பட்டனர். பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பின்னர் கண்ணாமூர்த்தி நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
இதுபற்றி இதய அறுவை சிகிச்சை துறைத் தலைவர் பா. மாரியப்பன் செய்தியாளர் களுக்கு நேற்று அளித்த பேட்டி:
இதய ரத்தக்குழாயின் அடைப்பை நீக்குவது சாதாரணமாக செய்யக்கூடியது. ஆனால், இதயத்தில் தனியாக அறை ஒன்றை உருவாக்கி செயல்படக்கூடிய மற்றும் செயல்படாத தசைகளைத் தனியாகப் பிரித்து, ரத்தக்குழாய்களின் அடைப்பை சரிசெய்யும் முறை சில தனியார் மருத்துவமனைகளில் ஒரு சில டாக்டர்கள் மட்டுமே செய்கின்றனர். தமிழக அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதை அப்படியே விட்டிருந்தால், இதயம் 100 சதவீதம் செயலிழந்து உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கும். இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதானால் ரூ.50 லட்சம் வரை செலவாகும். தற்போது இங்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ள இந்த அறுவை சிகிச்சையை, தனியார் மருத்துவ மனையில் செய்ய ரூ.5 லட்சம் வரை செலவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவமனை டீன் ஆர். ஜெயந்தி, மருத்துவக் கண்காணிப்பாளர் நாராயணசாமி ஆகி யோர் உடன் இருந்தனர்.