வேலூர் ரங்காபுரம் பகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட பொதுமக்கள் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த பிரதிநிதிகளின் கருத்து கேட்பு ஆலோசனை கூட்டத்தில் பேசும் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன். படம்: வி.எம்.மணிநாதன். 
தமிழகம்

பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் என்றுமே தொடர்பு ஏற்படாது: பொன்னையன் கருத்து

செய்திப்பிரிவு

வேலூர்: சூரியன் மாலையில் உதித்தாலும், சந்திரன் உலகில் இல்லாமல் போனாலும் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் என்றுமே தொடர்பு ஏற்படாது என முன்னாள் அதிமுக அமைச்சர் பொன்னையன் தெரிவித்தார்.

வேலூர் அடுத்த ரங்காபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட பொதுமக்கள் மற்றும் பல்வேறு தொழில்கள் சார்ந்த பிரதிநிதிகள் உடனான தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தேர்தல் அறிக்கை குழுவில் இடம் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஓ.எஸ்.மணியன், உதயகுமார், வளர்மதி, வைகைச் செல்வன் மற்றும் வேலூர் மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, அக்ரி எஸ்.கிருஷ்ண மூர்த்தி, சேவூர் ராமச் சந்திரன், முக்கூர் என்.சுப்பிரமணியம், எஸ்.ராமச் சந்திரன் மற்றும் மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 9 அதிமுக மாவட்டச் செயலாளர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பல்வேறு சங்கத்தினர் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசும் போது, ‘‘கடந்த 2000-ம் ஆண்டில் பெரும் கோட்டீஸ்வரர்கள் எண்ணிக்கை 9-ஆக இருந்த நிலையில் 2023- ல் அது 187 ஆக அதிகரித்துள்ளன. நாட்டின் மொத்த மக்கள் தொகை 144 கோடிக்கு மேலே உள்ள 10 சதவீத பேரிடம் நாட்டின் 80 சதவீத சொத்துக்கள் உள்ளன. மீத முள்ள 72 கோடி மக்களிடம் வெறும் 6 சதவீத சொத்துக்கள் மட்டுமே உள்ளன. அதே சமயம், மேலே உள்ள வர்கள் 4 சதவீத அளவுக்கும் மட்டுமே வரி செலுத்தும் நிலையில், கீழே உள்ள சாதாரண மக்கள் தான் 64 சதவீத அளவுக்கும் வரி செலுத்துபவராக உள்ளனர். இத்தகைய ஏற்றத் தாழ்வு நிலை மாற வேண்டும் என்றால் கல்வி, சுகாதாரம் இலவசமாக்கப் பட வேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்’’ என்றார்.

பின்னர், முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘இரண்டரை கோடி தொண்டர்கள் இபிஎஸ் பின்னால் இருக்கிறார்கள். கடலில் மூழ்கிவிட்ட ஓபிஎஸ் சொல்வதை எல்லாம் பொருட் படுத்தாதீர்கள். நீதிமன்றமே இரட்டை இலை இபிஎஸுக்கு என்று கூறிவிட்டது. அதில், ஓபிஎஸ் எப்படி போட்டியிட முடியும். சூரியன் மாலையில் உதித்தாலும், சந்திரன் உலகில் இல்லாமல் போனாலும் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் என்றுமே தொடர்பு ஏற்படாது. அவ்வளவு தான் டாடா பாய், பாய். அதிமுக, பாஜகவை இணைக்க ஜி.கே.வாசன் முயற்சி செய்வது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால், அப்படிப்பட்ட எந்த பேச்சுகளும் இல்லை. பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக தேர்தல் அறிக்கை சிறப்பாக இருக்கும்’’ என்றார்.

SCROLL FOR NEXT