திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 23 பேர் காயமடைந்தனர். லால்குடி மகா மாரியம்மன் கோயில் 59-ம் ஆண்டு பூச்சொரிதல்விழாவை முன்னிட்டு நேற்று லால்குடியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் ஜல்லிக்கட்டை தொடங்கிவைத்தார்.
இதில், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளில், கால்நடை மருத்துவக் குழுவினரின் பரிசோதனைக்குப் பிறகு 520 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்க 259 வீரர்கள் களமிறங்கினர்.
காளைகள் முட்டியதில் 8 வீரர்கள், 13 காளை உரிமையாளர்கள், 2 பார்வையாளர்கள் என மொத்தம் 23 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கியவீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளிக் காசுகள், பீரோ,சைக்கிள், கட்டில் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இதனிடையே, வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று, அங்கிருந்த பள்ளத்தில் விழுந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தது.
வடமாடு மஞ்சுவிரட்டு: மணப்பாறை பெஸ்டோ நகர்மைதானத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. இதில், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் களமிறங்கின. ஒவ்வொரு காளைக்கும் தலா 25 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்பட்டு, காளையை அடக்க9 வீரர்கள் வீதம் களமிறக்கப்பட்டனர். போட்டியில் வெற்றி பெற்றவீரர்கள் மற்றும் காளைகளுக்கு தலா ரூ.10,000 பரிசு வழங்கப்பட்டது. இதில், காளையை அடக்க முயன்ற11 பேர் காயமடைந்தனர்.