பெருந்துறையில் நேற்று நடைபெற்ற கொமதேக மாநாட்டில் அமைச்சர் சு.முத்துசாமி மாநாட்டு மலரை வெளியிட்டார். உடன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமிநாதன், கொமதேக மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோர். 
தமிழகம்

தமிழகத்தில் கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும்: ஈஸ்வரன் எம்எல்ஏ கோரிக்கை

செய்திப்பிரிவு

ஈரோடு: விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக வேண்டுமெனில், தமிழகத்தில் கள் இறக்க அனுமதிஅளிக்க வேண்டும் என்று கொமதேக மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ வலியுறுத்தினார்.

கொமதேக சார்பில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நேற்றுகொங்கு மண்டல எழுச்சி மாநாடுநடைபெற்றது. அமைச்சர் சு.முத்துசாமி மாநாட்டு மலரை வெளியிட்டார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமிநாதன் மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ பேசியதாவது:

கொங்கு இனத்தின் அடையாளமாக கொமதேக விளங்குகிறது. தற்போது ஒரு எம்.பி., ஒரு எம்எல்ஏமட்டும் இருக்கிறோம். கொங்குபகுதி முழுவதும் பல எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உருவாக வேண்டும். மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து கட்சித் தலைமை ஆலோசித்து முடிவெடுக்கும்.

தமிழகத்தில் விவசாயம் மோசமான நிலையில் உள்ளது. விவசாயி மகிழ்ச்சியாக இல்லை.விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், அவர்களது வருமானம் இரட்டிப்பாக வேண்டும். அதற்கு விவசாயிகள் கள் இறக்க அனுமதிக்க வேண்டும். அரசின் கொள்கைகள் மூலமே, விவசாயத்தைப் பாதுகாக்க முடியும்.

மத்திய அரசின் கொள்கைகளால், ஜவுளி, ரிக், லாரி, கோழித்தொழில் உள்ளிட்ட அனைத்துதொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 6,500 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் உள்ளன. இங்கு 60 சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. ஆனால் 18 ஆயிரம்கி.மீ. சாலைகள் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் 76 சுங்கச்சாவடிகள்தான் உள்ளன.

புற்றுநோய் அதிகரிப்பு: சாயக் கழிவுநீரால் கொங்கு மண்டலத்தில் புற்றுநோய் அதிகரித்துள்ளது. இங்கு மட்டும் 21 தனியார் புற்றுநோய் மருத்துவமனைகள் உள்ளன. சாயக் கழிவு நீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரிய மாவட்டங்களை... தமிழகத்தின் ஜிடிபியில் 45 சதவீதத்தை கொங்கு மண்டலம் தருகிறது. கோவை, ஈரோடு, சேலம் போன்ற பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட வேண்டும். ஆளுநர் பிரச்சினையால், அனைத்து பல்கலைக்கழகங்களும் செயல் இழந்துள்ளன. மாணவர்களின் படிப்பும், எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

குலதெய்வக் கோயில்களைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அதற்காக தனியாக ஒருஅணி அமைத்து செயல்பட உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவைத் தலைவர் தேவராஜன், நாமக்கல் எம்.பி. சின்ராஜ், ஈரோடு மேயர் நாகரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டின் நிறைவில், கின்னஸ் சாதனை முயற்சியாக 16 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற வள்ளி-கும்மி ஆட்டம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT