ஒரகடம்: காஞ்சி மாவட்டம் ஒரகடம் அருகே ராட்சத டிரெய்லர் லாரி, இருசக்கர வாகனம், தனியார் நிறுவன பேருந்து ஆகியவை அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன், மனைவி உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் கரும்பூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (34), இவரது மனைவி ஜெயலட்சுமி (25). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தையும், 5 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
வெங்கடேசன் புது வீடுகட்டி பிப்.11-ம் தேதி திறப்பு விழா வைத்துள்ளார். அதற்கான அழைப்பிதழை உறவினர்களுக்கு வழங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் திருவள்ளூரில் இருந்து சிங்கப்பெருமாள் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தபோது, மாத்தூர் அருகே சாலையின்வளைவில் திரும்பிக் கொண்டிருந்த ராட்சத டிரெய்லர் லாரியை பார்த்து தனது வாகனத்தை நிறுத்தினார்.
அப்போது ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு ஆட்களை ஏற்றி வந்த தனியார் நிறுவனப் பேருந்து அதிவேகமாக மோதியதில் ராட்சத டிரெய்லர் லாரி, பேருந்து ஆகியவற்றுக்கு இடையேஇருசக்கர வாகனம் சிக்கியது. இதில் வெங்கடேசன் பலத்த காயம் அடைந்தார், ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தனியார் நிறுவன பேருந்தின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியதால் அதன் ஓட்டுநர் சுமன் 2 கால்களிலும் முறிவு ஏற்பட்டு பேருந்துக்குள் சிக்கித் தவித்தார். விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸில், ஓட்டுநர் சுமன், இருசக்கர வாகனத்தில் வந்து பலத்த காயமடைந்த வெங்கடேசன் ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனியார் பேருந்து ஓட்டுநர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் பேருந்து ஓட்டுநர் உட்பட பேருந்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து ஒரகடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுமனை புகுவிழாவுக்காக அழைப்பிதழ் வழங்கிவிட்டு வீடு திரும்பிய தம்பதி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு சம்பவம்: ஆவடி அடுத்த மோரை அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டிலிருந்து, எம்.சாண்ட் ஏற்றிய 2 டாரஸ் லாரிகள் நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தன. அந்த லாரிகள் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது எதிர்பாராதவிதமாக ஒன்றன்பின் ஒன்றாக மோதின.
தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் டாரஸ் லாரியில் சிக்கி இடது கால் துண்டான நிலையில், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த ஓட்டுநர் யுவராஜை(26) மீட்டு, பாடியநல்லூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
மற்றொரு லாரி ஓட்டுநரான திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமேஷ்(45) லேசான காயங்களுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆவடி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.