சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடந்த மாநாட்டில் கபால அடித்தள அறுவை சிகிச்சை விளக்க புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகத்துடன் மருத்துவமனை டீன் பாலாஜி, மெட்ராஸ் காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரும், தலைமை மருத்துவருமான மோகன் காமேஸ்வரன் மற்றும் மருத்துவர்கள். 
தமிழகம்

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கபால அடித்தள அறுவை சிகிச்சை மாநாடு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் நடந்த ‘கபால அடித்தள அறுவை சிகிச்சை மாநாட்டில், மூக்கு, காது வழியாக மூளைக்கு கீழ் இருக்கும் கட்டிகளை அகற்றுவது குறித்து, நிபுணர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கபால அடித்தள அதிநவீன அறுவை சிகிச்சைக்கான ஒருநாள் பயிற்சி மற்றும் மாநாடு நேற்று நடைபெற்றது. மருத்துவமனை டீன் பாலாஜி தலைமையில் நடைபெற்ற மாநாட்டை, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து, மெட்ராஸ் காது, மூக்கு தொண்டை (இஎன்டி) ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரும், தலைமை மருத்துவருமான மோகன் காமேஸ்வரனுக்கு ‘செவிச் செம்மல்’ விருது வழங்கி கவுரவித்த அமைச்சர், CL Bald மேத்தா மருந்தாளுநர் கல்லூரித் தாளாளர் எஸ்.ரமேஷ் நிதியுதவியால் புனரமைக்கப்பட்ட கருத்தரங்கு கூடத்தை திறந்துவைத்தார்.

மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவு சார்பில் நடைபெற்ற மாநாட்டில், பல்வேறு மாநிலங்களில் இருந்து 25-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள், 350-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த அறுவை கிச்சை வல்லுநர்கள், தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மாநாட்டில் கபால அடித்தள அறுவைசிகிச்சை விளக்க புத்தகம் வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக டீன் பாலாஜி கூறியதாவது: நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பல நவீன சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஆனாலும், மூளையின் அடிப்பாகத்தில் ஏற்படும் சாதாரண மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட கட்டிகளை அகற்ற, கபாலத்தை திறந்து அறுவைசிகிச்சை செய்தனர். இப்பகுதியில் பல முக்கியமான நரம்புகளும், ரத்தக் குழாய்களும் செல்வதால் அறுவைசிகிச்சை செய்வது சவாலானது.

நவீனத் தொழில்நுட்பம் மூலமாக தற்போது இந்த அறுவைசிகிச்சை மூக்கு மற்றும் செவி வழியாக என்டோஸ்கோபி மற்றும் மைக்ரோஸ்கோபி மூலமாக மேற்கொள்ளப்பட்டு, புற்றுநோய் கட்டிகள் அகற்றப்படுகின்றன. இதன்மூலம் மூளைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைக்கப்படுகின்றன.

நரம்பு சார்ந்த பின்விளைவுகளும், இறப்பு விகிதங்களும் குறைகிறது. இந்த சிகிச்சை முறைகள் குறித்து, மாநாட்டில் பங்கேற்ற மருத்துவ வல்லுநர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இது மருத்துவர்களுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இந்த மாநாட்டில் நேவிகேஷன் எனப்படும் அதிநவீன தொழில்நுட்ப முறையும் எடுத்துரைக்கப்பட்டது. உடல் உறுப்பு மாற்று பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 40-க்கும் மேற்பட்ட காக்லியர் இம்பிளான்ட் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT