சென்னை: கபாலீஸ்வரர் கோயிலில் இளைஞர்கள் நடனமாடுவதுபோல் வெளியான வீடியோ குறித்து சைபர் க்ரைம் போலீஸாரிடம் அறநிலையத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சிலர் கோயில் வளாகத்தில் புகைப்படம், வீடியோஎடுத்து வருகின்றனர். பக்தி காரணமாக சிலர் இவ்வாறு செய்வதை பெரும்பாலும் யாரும் தடுப்பது இல்லை.
சினிமா பாட்டுக்கு நடனம்: இந்நிலையில், கபாலீஸ்வரர் கோயிலில் 2 இளைஞர்கள் சினிமாபாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. புனிதமான இடமாக கருதப்படும் கோயில் வளாகத்துக்குள் இளைஞர்கள் சினிமா பாடலுக்கு நடனமாடி, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்கள் சமூக வலைளதங்களில் பதிவிட்டுள்ள வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.