தமிழகம்

ஏழுகிணறு பகுதியில் முடிவடையாத சாலைப் பணிகள்: உங்கள் குரல் சேவை மூலம் மாணவர் புகார்

செய்திப்பிரிவு

‘தி இந்து’ வாசகர்கள் பொதுவான பிரச்சினைகள் குறித்து ‘உங்கள் குரல்’ சேவை வழியே தெரிவித்து வருகின்றனர். இதன்படி, ஏழுகிணறு பகுதி வாசகரும், சென்னை பல்கலைக்கழக மாணவருமான சீனிவாசன் ‘உங்கள் குரல்’ வழியே ஏழுகிணறு பகுதியில் சாலைகள் மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விசாரித்த போது, ஏழுகிணறில் தொடங்கி, சவுகார்பேட்டை மற்றும் பிராட்வே வரை நீண்டுள்ள புனித சேவியர் தெரு மற்றும் கோவிந்தப்பன் தெரு ஆகியவை மிகவும் மோசமான நிலையில் உள்ளன என்று தெரியவந்துள்ளது.

இங்கு சாலை புதுப்பிக்கும் பணி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டு பாதியில் அரைகுறையாக நிற்பதால், மழை நீர் தேங்கி மக்கள் நடக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அரைகுறையாக போடப்பட்டுள்ள புதிய சாலையும், மழை நீரால் சேதமாகும் நிலை உள்ளது. இதைத் தவிர்க்க விரைவில் புதிய சாலை போடும் பணிகளை முடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

சாலை புதுப்பிப்பு பணி பாதியில் நிற்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “சாலை புதுப்பிப்பு பணிகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்துக்குள் பணிகளை முடித்துவிடுவோம்” என்றனர்.

SCROLL FOR NEXT