தருமபுரி: வந்தே பாரத் ரயில் ஓசையின்றி சீறிப்பாயும் சூழலில் ரயில் பாதைக்கு கீழாக பாலம் அமைத்துத் தரும் வரை தேர்தல்களை புறக்கணிக்கப் போவதாக தருமபுரி மாவட்டம் ஜோதி அள்ளி கிராம மக்கள் அறிவிப்புப் பலகை அமைத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பி.செட்டி அள்ளி அருகே உள்ளது ஜோதி அள்ளி கிராமம். சுமார் 1,500 வீடுகள் உள்ள இந்த கிராமத்தில் 6,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் பாலக்கோடு நகரம், தருமபுரி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல சேலம் - பெங்களூரு ரயில் பாதையைக் கடந்தே செல்லும் நிலை உள்ளது.
அருகில் பாலம் எதுவும் இல்லாததால் ரயில் பாதைக்கு கீழாக பாலம் அமைத்துத் தர வலியுறுத்தி இப்பகுதி மக்கள் பலமுறை அரசிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் மனு அளித்து விட்டனர். இருப்பினும், இவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் தற்போது, ‘ரயில் பாதைக்கு கீழாக ஜோதி அள்ளி கிராமத்துக்கு பாலம் அமைத்துத் தரும் வரை, வரவிருக்கும் மக்களவை தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களையும் புறக்கணிக்கிறோம்’ என்ற தகவல் அடங்கிய அறிவிப்புப் பலகையை ஊர் முகப்பில் நிறுவியுள்ளனர்.
இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறியது: கடந்த ஓராண்டுக்கு முன்புவரை இந்த வழித் தடம் மின் மயமாக்கப்படாமல் இருந்தது. எனவே, அப்போது ரயில்கள் அனைத்தும் டீசல் இன்ஜின்கள் மூலம் இயக்கப்பட்டதால், தொலைதூரத்தில் ரயில் வரும் போதே அதன் ஓசை தெளிவாகக் கேட்கும். எனவே, தண்டவாளத்தை கடந்து செல்லும் கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்க முடிந்தது. ஆனால், தற்போது இந்த ரயில் பாதை மின்மயமாகி விட்டதால் இவ்வழியே இயக்கப்படும் ரயில்கள் ஓசையின்றி வருவதால் ஆபத்தான சூழலில் ரயில் பாதையை கடந்து செல்கிறோம்.
அதேபோல, அண்மையில் இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் துளியும் ஓசையின்றி சீறிப்பாய்ந்து செல்கிறது. எனவே, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். ஜோதி அள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் சிரமங்களை உணர்ந்து இப்பகுதியில் ரயில் பாதைக்கு கீழாக விரைந்து பாலம் அமைத்துத் தர வேண்டும். அதுவரை எந்த தேர்தலிலும் நாங்கள் வாக்கு செலுத்தப் போவதில்லை. இவ்வாறு கூறினர்.
இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு வட்டாட்சியர் ஜோதி அள்ளி கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பாலக்கோடு அருகிலுள்ள வாழைத் தோட்டம் கிராம மக்களும் இதைப் போலவே ரயில்வே பாலம் அமைக்க வலியுறுத்தி கிராம முகப்பில் தேர்தல் புறக்கணிப்பு பேனர் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.