சென்னை: மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் கூடுதல்தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. திமுக குழுவினருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ ஜி.பழனிசாமி ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
அப்போது, 4 விருப்ப தொகுதிகள் பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் கொடுத்ததாகவும், திமுக தரப்பில் ஒரு மக்களவை தொகுதியும், மாநிலங்களவையில் ஒரு இடமும் கொடுப்பதாகச் சொன்னதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்தஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் (தனி) தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த இரண்டு தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றது.
திமுகவுடனான தொகுதி பங்கீடுபேச்சுவார்த்தை குறித்து கே.சுப்பராயன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திமுகவுடனான தொகுதிபங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம் மிகவும் நன்றாக இருந்தது. கடந்த முறையைவிட கூடுதல் தொகுதிகளை கேட்டு பட்டியலை கொடுத்திருக்கிறோம். பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை. முதல்வர் சென்னை திரும்பிய பிறகு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்” என்றார்.
இதற்கிடையே, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இன்று (பிப்.4) சென்னை அண்ணா அறிவாலயம் வருமாறு கூட்டணி கட்சியான மதிமுகவுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திமுக தொகுதி பங்கீட்டுக் குழு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.